இந்தியாவின் 78 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் 11 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் கொடி ஏற்றினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து டாக்டர்.அப்துல்கலாம் விருது, சந்திரயான் 3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேலுக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரியை சேர்ந்த செவிலியர் ஆ.சபீனாவுக்கும் முதல்வர் வழங்கினார்.
இந்நிலையில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 32 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பாலை கொள்முதல் செய்து வருகிறது. பொதுவாக தமிழகத்தில் பண்டிகைகள், சுதந்திர தினம் என்றால் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் குறிப்பிட்டு வாழ்த்துக்கள் ஆவின் பால் பாக்கெட்களில் இடம்பெறும். ஆனால், நேற்று நமது நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தினம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது வாசகங்களுடன் வரும் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், விநியோகம் செய்யப்பட்ட பாலில் சுதந்திர தின வாழ்த்து இடம் பெறவில்லை. இதனால் மக்கள் ஆவின் பால் நிறுவனத்தை நடத்தி வரும் தமிழக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, சுதந்திர தின வாழ்த்து 2-வது முறையாக பால் பாக்கெட்டில் அச்சிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏந்தி இருசக்கர வாகன பேரணிக்கு பாஜக நிர்வாகிகள் அனுமதி கேட்ட நிலையில், காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதுமட்டும் அல்லாமல் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ரசமுத்திரபாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினத்திற்கு தேசிய கொடி ஏற்ற கூடாது என்று சமூக விரோதிகள் நள்ளிரவில் கொடிக்கம்பத்தை உடைத்தெறிந்த சம்பவமும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
மக்களிடையே தேசபக்தி உணர்வை தூண்ட ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தினார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறை கூட தமிழக மக்களை வீட்டில் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று கூறவில்லையே ஏன் ? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழக அரசின் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தின வாழ்த்துக்கள் இடம் பெறாததை கண்டித்து சமூக வலைத்தளங்களில் திமுக அரசை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரமலான் பண்டிகைக்கான வாழ்த்துச் செய்தி இடம்பெற்ற நிலையில், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இடம்பெறவில்லை எனவும், ஆவின் நிறுவனம் பாகுபாட்டுடன் செயல்படுவதாகவும் சமூகவலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.