மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுவனுக்கு, கடந்த 4 ஆண்டுகளாக முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதியுற்று வருகிறார்.
மதுரை அரசு மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் புதிய டவர் பிளாக் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும், அங்கு மருத்துவர்கள் உட்பட 779 மருத்துவப் பணியாளர்கள் இன்னும் பணியமர்த்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இச்சிறுவனை போலவே, தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
மதுரை அனுப்பானடி சிறுவனின் தாய் உயிரிழந்துவிட்டார். தந்தையோ மகனை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார். தற்பொழுது தன் சகோதரனுடன் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் அச்சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கண் பார்வை மங்கிப்போன பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் அந்த 10 வயது சிறுவன், இதய நோயால் அவதியுற்று பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்த சிறுவனுக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றும், தனியாருக்குச் சென்று சிகிச்சை பார்க்கும் அளவுக்கு வசதி இல்லை என்றும் கூறுகிறார் பாட்டி.

சிறுவனின் பாட்டி இதுதொடர்பாக கூறுகையில், “நான்கு வருடங்களாக மதுரை அரசு மருத்துவமனையில்தான் பார்த்து வருகிறேன். அவர்கள் சரியாக பார்க்கவில்லை. அதன்பின் வீட்டில் வைத்திருந்து தனியார் மருத்துவமனையில் பார்த்து வருகிறோம். மேற்கொண்டு தனியாரில் மருத்துவம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. அரசாங்கம்தான் என் பேரனைக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும்.
மதுரை அரசு மருத்துவமனையில் ‘அறுவை சிகிச்சை செய்ய 20 வயதாக வேண்டும், இப்போது செய்ய முடியாது, தாங்கும் சக்தி வேண்டும்’ என்றனர். அதற்கு, ‘நான் இருக்கும்போதே செய்துவிடுங்கள். நானும் இல்லையென்றால், தாய் தகப்பன் இல்லாமல் பார்ப்பதற்கும் யாரும் இல்லை’ என சொன்னேன்.
பின்னர் மாத்திரைகளை மட்டும்தான் எழுதி கொடுக்கிறார்கள். 10 மாத்திரைகள்தான் கொடுக்கின்றனர். என் பேரனைக் காப்பாற்ற வேண்டும் என ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு திரிகின்றோம். அரசு ஏதாவது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
குடும்ப வருமானத்திற்காக இந்த 10 வயது சிறுவனின் உடன் பிறந்த சகோதரரும் எட்டாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு இரும்பு பட்டறையில் வேலைக்கு செல்கிறார். தனியார் மருத்துவமனையில் இந்த மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என சொல்லப்படுகிறது. அந்த வசதி இல்லாததால் அரசு மருத்துவமனையை கதியென பாட்டியும் பேரனும் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை அரசு மருத்துவமனையில் புதிய டவர் பிளாக் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டும் செயல்பாட்டுக்கு வராததால் இந்தச் சிறுவனைபோல் பலரும் இதே நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்து வருவதாக கூறுவதாக கூறப்படுகிறது.
“அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 21 துறையைச் சார்ந்த மருத்துவ பணியாளர்கள் மொத்தம் 1973 நபர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது 1446 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள் என மொத்தம் 527 பணியாளர்கள் பணி இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.
இதில் குறிப்பாக 315 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டமைக்கப்பட்ட டவர் பிளாக் கட்டடத்தில் மட்டும் மருத்துவர் உட்பட சுமார் 779 மருத்துவ பணியாளர்களின் காலி பணியிடம் உள்ளது” என பதில் அளித்துள்ளது.