உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தாய்மார்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஆறு மாதம் முறையாக கொடுப்போம், கர்ப்பிணிகள் காய்கறி உள்ளிட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.
பின் நிகழச்சியில் பேசிய ஆட்சியர், “உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஒரு வாரம் உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் சூழலில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மார்கள், முறையாக தாய்ப்பால் வழங்காததால் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதம் முறையாக தாய்ப்பால் வழங்கினால் மட்டுமே குழந்தைகள் நல்ல மூளை வளர்ச்சி உடன் மிக திடகார்த்தமாக குழந்தைகள் வளர்வார்கள். பிறந்த குழந்தைகளை ஆறு மாதத்திற்கு பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லக்கூடாது. குழந்தைகளுக்காக தான் நாம் வேலைக்குச் சென்று உழைக்கிறோம் என்பதை நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, ஆறு மாதம் குழந்தைகளுக்கு தாய்மார்கள் வீட்டில் இருந்து சத்தான தாய்ப்பாலை கொடுத்து, ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு சத்தான உணவு. பால் பவுடர், மாட்டுப் பால், கழுதைப் பால் உள்ளிட்டவைகளில் எந்த சத்தும் கிடையாது” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து சென்ற மாவட்ட ஆட்சியர் அருணாவை, நோயாளிகளின் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு ராணியார் அரசு மருத்துவமனையில் கழிப்பிட வசதி இல்லை, கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது, அம்மா உணவகத்தில் முறையாக உணவு வழங்குவதில்லை என அடுக்கிய புகார்களால் மருத்துவமனை வளாகம் சற்று நேரம் பரபரப்பானது.
இதனைக் கேட்ட ஆட்சியர், அவரது கோரிக்கைகளான கழிபறை மற்றும் உணவகத்தின் தேவை இன்றியமையாதது. எனவே அதை உடனடியாக செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.