பா.ஜ.க.வின் கொடி கம்பங்களை திண்டுக்கல் டி.எஸ்.பி. அகற்ற உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், அமைந்துள்ள காந்தி கிராமம், கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையடுத்து, அங்கு பன்மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மத்திய பாதுகாப்பு படையினருடன் இணைந்து, தமிழக காவல்துறையினர் என சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்கும் விதமாக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். இதனை தொடர்ந்து, பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு பிரதமர் வருகிறார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், பாரதப் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வை சேர்ந்த தொண்டர்கள் கட்சி கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகளை அமைத்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் டி.எஸ்.பி. பா.ஜ.க.வினரின் கொடி கம்பங்களை அகற்ற காவல்துறையினருக்கு உத்தரவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வினரிடம் மென்மையாகவும், தங்களிடம் காவல்துறையினர் மிக கடுமையாக நடந்து கொள்வதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து, திண்டுக்கலில் தற்போது பதற்றமான சூழல் ஏற்படுள்ளது.