தாய் சிறுத்தை வரவேற்பு… வன்னியரசு எதிர்ப்பு… சிறுத்த குட்டிகள் அதிர்ச்சி!

தாய் சிறுத்தை வரவேற்பு… வன்னியரசு எதிர்ப்பு… சிறுத்த குட்டிகள் அதிர்ச்சி!

Share it if you like it

என்.ஐ.ஏ. விசாரணையை திருமாவளவன் வரவேற்று இருக்கிறார். அதே வேளையில், இதற்கு வன்னியரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இரு தலைவர்களின் முரண்பட்ட கருத்து வி.சி.க. தொ(கு)ண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த 23-ம் தேதி அதிகாலை சென்று கொண்டு இருந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவம், அப்பகுதி மக்களையும் தாண்டி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. சிலிண்டர், வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என காவல்துறை தரப்பு தெரிவித்து இருந்தன. இந்த கோர நிகழ்வில், காரில் சென்று கொண்டு இருந்த உக்கடம் கோட்டை மேட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, தடயவியல் துறையினர் அப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், ஏராளமான ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இதையடுத்து, இது சிலிண்டரால் நிகழ்ந்த விபத்து அல்ல என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தமிழக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை வெளியிட்டன. இதனையெல்லாம், வைத்து பார்க்கும் போது இது தற்கொலை படைக்கான தாக்குதல் முயற்சியாக தான் இருக்ககூடும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அந்தவகையில், கோவை மாவட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொள்ளும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில் கூறியதாவது ; கோவை சிலிண்டர் வெடிப்பு சம்மந்தமாக தமிழக காவல்துறை விசாரணை மற்றும் நடவடிக்கைகள் சரியான திசை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணை என்பது மாநில உரிமைகளை பறிப்பதாகும். இதை வைத்து வழக்கம் போல, பா.ஜ.க.வின் வெறுப்பரசியலுக்கு NIA உதவுமே தவிர வேறொன்றும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேவேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன், கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இருக்கலாமெனும் பேரச்சம் எழுந்துள்ள நிலையில் அதனை தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்குப் பரிந்துரைக்க மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் முன்வந்திருப்பதை வி.சி.க. வரவேற்கிறது. பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இரு தலைவர்களின் முரண்பட்ட கருத்து அக்கட்சியை சேர்ந்த தொ(கு)ண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it