போலி சமூக நீதி பேசிக் கொண்டு, திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து நடக்கும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று திருமாவளவன் மீது குற்றசாட்டை வைத்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு என்று யாராவது ஒரு கூட்டம் போட்டால் அழைப்பு கூட இல்லாமல் அண்ணன் திருமாவளவன் கலந்துகொள்வார். போலி சமூக நீதி பேசிக் கொண்டு, திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து நடக்கும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். வேங்ககைவயல் சம்பவத்திலும், திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவத்திலும், திருமாவளவன் திமுக அரசைக் கண்டிக்கக் கூட முன்வரவில்லை. தன்னை நம்பும் ஒரு பெரும் சமுதாயத்தைத் திமுகவிடம் அடகு வைக்க நினைக்கிறார்.
ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வன்று தமிழக அரசு பூஜை, அன்னதானம், பஜனை மற்றும் ஒளிபரப்பு ஆகிய அனைத்தையும் தடை செய்துள்ளது என்ற உண்மையை சொன்னதற்கு தினமலர் பத்திரிகை மீது மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தான் நீதிமன்றத்திற்குச் சென்று நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி பெற்றது. அதையே திமுக மறைக்கப் பார்க்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 பத்திரிகையாளர் நேச பிரபு அவர்கள் காவல்துறையினரின் மெத்தனத்தால் மர்மநபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மணல் கொள்ளை, கள்ள சாராயம் போன்ற செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு, இன்று தமிழகத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் போராட்டம் நடத்தாத பத்திரிகையாளர்கள், எனக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். திமுகவின் செய்தி தொடர்பாளர்கள், திமுகவின் பரப்புரையாளர்கள் போல் செயல்படும் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட சில பத்திரிகையாளர்களை யாரும் மதிக்கமாட்டார்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், இளைஞர்களுக்கான, மாணவர்களுக்கான, விவசாயிகளுக்கான, பெண்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்தும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நமது பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை