“உருவாய் அருவாய் ;
உளதாய் இலதாய்;
மருவாய் மலராய்;
மணியாய் ஒளியாய்;
கருவாய் உயிராய்;
கதியாய் விதியாய்;
குருவாய் வருவாய் ;
அருள்வாய் குகனே.”
என்றெல்லாம் போற்றி வணங்கப்படும் முருகக் கடவுளின் அடி போற்றி வணங்கித் தம் வாழ்வை முருகப் பெருமான் சேவைக்கே அர்ப்பணித்து வாழ்ந்தவர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
வேலூர் மாவட்டத்திலுள்ள “காங்கேய நல்லூர்” என்னும் ஊரில், ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, 1906ம் வருடம் பிறந்தார். இவரது தந்தை திரு.மல்லையதாசர், தாயார்.திருமதி.கனகவல்லி அம்மையார். இத்தம்பதியரின் பதினோரு பிள்ளைகளில், நான்காவது மகவாக முருகனருளுடன் அவதரித்தார், வாரியார் சுவாமிகள். இவர் தம் 5வது வயதில், திருவண்ணாமலையிலுள்ள “பாணிபத்திர தேவர்” மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப் பட்டார்: 19வது வயதில் அமிர்தலட்சுமி அம்மையாருடன், மணம் செய்விக்கப் பட்டார்.
இவர் ஒரு தலை சிறந்த முருக பக்தராவார்.ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துவதைத் தவமாகக் கருதி, சேவை புரிந்து வந்தார்.
இவரது தந்தையாரே இவரது குரு ஆவார். “குல வித்தை கல்லாமல் பாகம் படும்” என்னும் மொழிக்கேற்ப, இவர் தமது தந்தையாரின் சொற்பொழிவைக் கேட்டுக் கேட்டு, தம் இளம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் மிக்கவரானார். இவரது தந்தை இயல், இசை, புராண உபன்யாசம் வழங்குதலில் வல்லுநர். இவரே வாரியார் சுவாமிகளுக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். வாரியார் சுவாமிகள், தம் 12வது வயதில், பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்து,18 வது வயதிலேயே சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம், நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சியும் பெற்றார்.
தாயார் கனகவல்லி அம்மையார், சிறுவனாயிருந்த வாரியார் சுவாமிகளிடம் “நிலம் அழுக்காக இருப்பதால், நீ உடையை மடக்கிக் கொண்டு அமர்கிறாய். அது போன்று, உள்ளத்திலே அழுக்குகள் இருந்தால், அந்த உள்ளத்திலே ஆண்டவன் இருக்கக் கூசுவான் ” என்று கூறியது. அவர் மனதில் ஆன்மீகத் தெளிவை உண்டாக்கியது.
வாரியார் சுவாமிகளுடைய ஆன்மீகப் பிரசங்கங்களில் ஆழ்ந்த சங்கீத ஞானத்துடன் திருப்புகழ், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை இன்னிசையுடன் பாடி கதாகாலாட்சேபம் செய்வது வழக்கம். இவரது சொற்பொழிவு பேச்சு வழக்கை ஒட்டியும் அமைந்திருக்கும். இவர் ஆன்மீக மொழி, பாமரர்களுக்கும் எளிதில் புரியும் வகையில் அமைந்திருந்ததால் உயர் வேதாந்த, சித்தாந்த கருத்துக்களையும் எளிய நடையில் அவர்களின் மனம் கவரும் வகையில் எடுத்துரைத்து, அவர் தம் உள்ளம் கவர்ந்தவரானார். இதன் மூலம் அனைத்து மக்களிடமும், ஆன்மீக எழுச்சி ஏற்பட்டது. சுவாமிகள் சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமை பெற்றவராக விளங்கினார்.
‘ திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையைத் தொடங்கி, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரை எழுதி வந்தார். கந்தர் அலங்கார உரை, கற்பு நெறிக் கதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியனவும் இப்பத்திரிகையில் வெளி வந்தன. திருவருட் செல்வர்,கந்த வேள் கருணை, இராம காவியம், மகாபாரதம் ஆகியவை போன்ற நூற்றைம்பது நூல்களை இயற்றியுள்ளார். “பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு” மற்றும் குழந்தைகளுக்கான “தாத்தா சொன்ன குட்டிக் கதைகள் ” என்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
இவருக்கு தமிழ் இசைச் சங்கம் 1967ம் ஆண்டு இசைப் பேரறிஞர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.
1993 நவம்பர் 7ம் தேதி திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது 87 ம் வயதில் இலண்டனில் இருந்து ஆன்மீகப் பணியை முடித்து இந்தியா திரும்பி வரும் வழியிலேயே, தனது கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டு கால திருப்பணியை முடித்துக் கொண்டு, முருகனது பொற்பாதக் கமலங்களில் தனது தெய்வீக ஆன்மாவை இரண்டறக் கலந்து இறவா நிலையை அடைந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகில், இவரை சிறப்பிக்கும் வகையில், கோயில் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இவர், நம் மக்களால் அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் அன்போடு அழைக்கப்பட்டார். இவரது ஆன்மீகத் தொண்டின் மூலமாக, இந்திய தேசத்தில் மட்டுமல்லாது, உலகம் முமுவதும் ஆன்மீக எழுச்சி ஏற்பட்டது. இவர்தம் பணியினைச் சிறப்பிக்கும் வகையில், 2021 முதல் இவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
“.எல்லோரும் இன்புற்றிருக்க ஆன்மீகப் பணியாற்றிய உயரிய தவசீலராம் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகளை நாம் நெஞ்சில் நிறுத்தி அவர் வழி நடந்து சிறப்போம்.
உலகின் குருவாய் பாரதம் விளங்கிட வந்து உதித்தனர், எத்தனையோ மகான்கள்; அனைவரையும் வணங்கி தேசபக்தி, தெய்வ பக்தி நிறைந்தும், நாட்டின் பழம் பெரும் கலாச்சாரம், பண்பாடு, வளங்களைக் காப்போம் என நம் மனதில் உறுதி பூண்டு பணியாற்றுவோம்.
“பாரத மாதாவுக்கு வணக்கங்கள்”
” ஜெய் ஹிந்த்”
ஸ்ரீ.சாருமதிதேவி, மாநில மகளிர் அணிச் செயலாளர்,
தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு.