திருபுவனத்தில் மத மாற்றத்தில் ஈடுபட்ட கும்பலை கண்டித்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு சூடுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு உட்பட 24 இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் பா.ம.க. முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். அப்பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்ட முஸ்லீம்களை கண்டித்ததால், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்த திருவிடைமருதூர் போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான் உட்பட பலரை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில்தான், இன்று காலை முதல் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக்கின் திருநெல்வேலி வீடு உட்பட தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகள் தொடர்பாக இச்சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.