திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அலைகடலென திரண்டனர். இதனால், திருவாரூர் தெற்கு ரத வீதி மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும் என்று திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அதாவது, நாத்திகரான கருணாநிதியின் பெயரை தேரோடும் வீதிக்கு வைக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் வாதம். ஆகவே, திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க எதிர்ப்புத் தெரிவித்து திருவாரூர் தெற்கு வீதியிலுள்ள நகராட்சி அலுவலகம் முன்பு தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க.வினர் அலைகடலென திரண்டதால், எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “திருவாரூர் என்றாலே ஆழித்தேர்தான் நினைவுக்கு வரும். இந்த தேர் ஆசியாவிலேயே புகழ்பெற்ற ஆழித்தேர். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வீதி இது. மேலும், இந்த மண்ணை மனுநீதிச் சோழன் ஆண்டபோது, பசுவின் கன்று மீது தேரை ஏற்றியதற்காக, தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொலை செய்து நீதி வழங்கினார். அந்த மனுநீதிச் சோழனும் இந்த தெற்கு வீதியில் நடமாடியிருக்கக் கூடும். ஆகவே, இவ்வளவு பெருமைமிக்க தெருவுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டக் கூடாது. அதற்கு பதிலாக மனுநீதிச் சோழன் சாலை என்று பெயர் சூட்டலாம். மீறி கருணாநிதி பெயரை சூட்டினால், திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை இயங்க விடாமல் முடக்குவோம். வேண்டுமானால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத மலை கிராமம் ஒன்று இருக்கிறது. அந்த கிராம சாலைக்கு கருணாநிதி பெயரை வைத்து சாலையை சரி செய்யட்டும்.
மத்திய அரசு 44 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. எனினும், மத்திய அரசு திட்டங்களில் பிரதமர் திட்டம் என்றுதான் உள்ளதே தவிர, மோடி பெயர் வைப்பதில்லை. ஆனால், மத்திய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு. ஜாதி வேறுபாடு இருப்பதால்தான், ஜாதி பார்த்து வீடு வீடாகச் சென்று சாப்பிடுவதும், அதை குடும்பத் தொலைக்காட்சியில் வெளியிடுவதுமாக நாடகத்தை நடத்துகின்றனர் தி.மு.க.வினர். மாறாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வீட்டிற்கு மற்ற ஜாதியினரை அழைத்து உணவு அளிக்க வேண்டியதானே. அதுதான் சமூக நீதி என அனைவரும் பாராட்டுவர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று நாட்டுக்கு விஷ்வ குருவாக இருப்பார்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிலை இந்தியாவுக்கு வரும் என்கிறார் திருமாவளவன். இலங்கையில் ஒரு குடும்பம் கொள்ளையடித்து சொத்து குவித்தது. இதனால், அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆகவே, திருமாவளவன் தமிழகத்தை நன்றாகப் பார்க்க வேண்டும். உண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது தமிழகத்துக்குத்தான் வரும். அப்படியான குடும்ப ஆட்சிதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. எனவே, தமிழகத்தின் வீழ்ச்சிக்கு அறிவாலயம் தான் காரணமாக இருக்கும். இதேபோல் இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ளன. அதேசமயம், இந்தியாவை பொறுத்தவரை பிரதமர் மோடி சரிவு ஏற்பட விடமாட்டார். 2024-ம் ஆண்டு தேர்தல் தி.மு.க.விற்கு இறுதித் தேர்தலாக இருக்கும்” என்றார் அண்ணாமலை.