பிரதமரிடம் கூறியது இது தான் : மதுரை ஆதினம் !

பிரதமரிடம் கூறியது இது தான் : மதுரை ஆதினம் !

Share it if you like it

நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு சென்றார்.

அங்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தமிழரின் பாரம்பரிய உடையில் வருகை தந்தார். கோயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது, அறங்காவலர் குழுவானது சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சியம்மன் சந்நிதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர், சுந்தரேஸ்வரர் சந்நிதியில் தரிசனம் செய்தார். பொற்றாமரை குளத்தை பார்வையிட்டு வணங்கினார்.

இரவு பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினார். ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்’ என பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரதமர் மோடி வந்துகொண்டிருந்தபோது அவரை வரவேற்க மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். மடத்தின் முன்பாக பொதுமக்களுடன் மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். பிரதமரின் வாகனம் முன்னே செல்லும் போது அவரால் பாதுகாப்பு கெடுபிடிகளால் முன் செல்ல முடியவில்லை. எனினும் பிரதமர் மோடி அவரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி மதுரை ஆதீனத்தை அழைத்தார். பிரதமர் அழைத்ததை கவனிக்காத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை முன் நகரவிடாமல் தொடர்ந்து தடுத்தனர். பின்னர் பிரதமர் மோடி அழைத்ததை சொன்ன பிறகு தான் அனுமதித்தனர். காருக்கு அருகில் சென்று பிரதமர் மோடிக்கு, மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்தார். பின்னர், அங்கிருந்து மோடி புறப்பட்டுச் சென்றார்.

இதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு மீட்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு” என்றார். பிரதமர் மோடியின் வருகையால் மதுரையே பரபரப்பாக காணப்பட்டது.


Share it if you like it