சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் அமலாக்கத்துறையினரின் சோதனையும் தொடர்வது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரி துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருந்தே திமுக மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை தொடரப்பட்டுவருகிறது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் அமைந்துள்ள எஸ்.கே பீட்டர் என்பவருக்கு சொந்தமான ஓசன் லைப் ஸ்பேஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
1000 கோடி வருமானம் ஈட்டும் இவரது நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் இந்தசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதனைதொடர்ந்து சென்னை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள பிஎஸ் சுப்ரமணியன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த இருந்தனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அங்கு சோதனை நடத்தப்படாமல் உள்ளது.