தமிழகத்தில் பல அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பது, சமைக்க கூடிய இடத்தை அசுத்தமாக வைத்திருப்பது, இதனால் உணவில் புழுக்கள், வண்டுகள் ஆகியவை சிக்கன், அல்லது பிரியாணியில் கலந்து வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு, வாந்திபேதி ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக உணவகங்களில் சோதனை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டால் மக்கள் பயமில்லாமல் ஹோட்டலில் சாப்பிடுவார்கள். இந்நிலையில்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கி வரும் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட ஏழுமலை என்பவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அஷ்வீன் (12) என்ற சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற நான்கு பேரும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி அனைத்து உணவகங்களிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பரிசோதனை செய்ய தவறுவதால் தரமற்ற உணவுகள் வழங்கப்படுகிறது என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.