மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையம் செல்வார்கள். ஆனால் காவல் நிலையத்திற்கே பிரச்சனை என்றால் என்ன சொல்வது ? நேற்று முன் தினம் சேலம் மாவட்டம் எடப்பாடி தலைமை காவல் நிலையத்தில் காவலர் ராமச்சந்திரன் இருந்துள்ளார். அப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தபொழுது மர்ம நபர்கள் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் கொண்டு வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து காவலர் ராமச்சந்திரன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் தடவியல் நிபுணர்கள் காவல் நிலையம் வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணேசனின் ஒரு மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலை வேந்தன் என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் நேற்றிரவு கணேசன் வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு தமிழகத்தில் காவல் நிலையம் மீதும் காவல் துறை அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. இவ்வாறு போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பாமர மக்கள் எந்த நம்பிக்கையில் காவல் நிலையம் வந்து புகார் அளிப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.