தூத்துக்குடியில் உதயநிதி நடித்திருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் பார்க்க வந்த தி.மு.க.வினர், திரையரங்கில் ரகளை செய்ததுடன், தட்டிக்கேட்ட போலீஸாரையும் தரைக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. இப்படத்தைப் பார்க்க, லோக்கல் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் பார்வையிடச் சென்றனர். அப்போது, ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் எடுத்துவிட்டு, நிறைய பேர் தியேட்டருக்குள் சென்றிருக்கிறார்கள். மேலும், சிலர் மது அருந்திவிட்டு தியேட்டருக்கு வந்திருக்கிறார்கள். அதோடு, பணம் கொடுக்காமல் ஓசியில் ஸ்நாக்ஸ் கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.
தகவலறிந்து தியேட்டர் உரிமையாளர் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார். அவரிடமும் தி.மு.க. நிர்வாகிகள் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இதையடுத்து, தியேட்டர் உரிமையாளர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் தியேட்டருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால், போலீஸாரிடமும் தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததோடு, அவர்களை தரக்குறைவாகவும் பேசி மிரட்டி இருக்கிறார்கள். இதனால், படம் பார்க்க வந்த ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். படம் பார்க்க முடியாமல் ஏராளமானோர் பாதியிலேயே கிளம்பிச் சென்றனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.