ஓட ஓட விரட்டி ஆசிரியர் மீது தாக்குதல்: பெற்றோர் கைது!

ஓட ஓட விரட்டி ஆசிரியர் மீது தாக்குதல்: பெற்றோர் கைது!

Share it if you like it

கோவில்பட்டி அருகே ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்கிய பெற்றோரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ஆசிரியரை தாக்கிய இச்சம்பவத்தின் வீடியோ வெளியாக தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் செல்வி. இவரது கணவர் சிவலிங்கம். இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருகிறார்கள். இத்தம்பதியின் 7 வயது மகன் பிரகதீஸ், தனது தாத்தா முனியசாமியுடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறான். இவன், அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக வீரப்பட்டியைச் சேர்ந்த குருவம்மாள் என்பவரும், ஆசிரியராக தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பள்ளியில் மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பிரகதீஸ், கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், வீட்டுக்குச் சென்ற மாணவர் பிரகதீஸ், இதுகுறித்த கேட்ட தனது தாத்தா முனியசாமியிடம், தன்னை ஆசிரியர் பாரத் அடித்ததாகக் கூறியிருக்கிறான். இதையடுத்து, இதுகுறித்து சிவலிங்கமும், செல்வியும் போலீஸில் புகார் செய்திருக்கிறார். ஆனால், போலீஸார் வந்து விசாரித்தபோது பிரகதீஸ் விளையாடும்போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது தெரியவந்ததால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சென்று விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி, மகள் செல்வி மற்றும் மருமகன் சிவலிங்கம் ஆகியோர் நேற்று பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு எப்படி மகனை அடிக்கலாம்? என்று ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆசிரியர் பாரத்தை செருப்பால் அடிப்பேன் என்று செல்வி சொல்லவே, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆசிரியர் பாரத்தை சிவலிங்கம் கடுமையாக தாக்கத் தொடங்கினார். வகுப்பறையை விட்டு வெளியே வந்து தப்பிக்க முயன்ற பாரத்தை விடாமல், சிவலிங்கம், செல்வி, முனியசாமி ஆகிய 3 பேரும் ஓட ஓட விரட்டி தாக்கினார்கள்.

செல்வியோ செருப்பை கழற்றி ஆசிரியர் பாரத்தை தாக்கினார். இதை தடுக்க வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் 60 வயதான குருவம்மாளையும் அவர்கள் தாக்கினர். இதனிடயை, எட்டயபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே, விரைந்து வந்த அவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்களை தாக்கியது, செருப்பால் அடித்தது போன்ற குற்றத்திற்காக 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பள்ளிக்குள் நுழைந்த ஆசிரியர்களை தாக்கிய இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருவதோடு, ஆசிரியர்களை தாக்கிய பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Share it if you like it