நெல்லை திருமண்டல அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி.யின் ஆதரவாளர்கள் மத போதகரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருநெல்வேலியில் நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலம் செயல்பட்டு வருகிறது. இதன் பேராயராக இருப்பவர் பர்னபாஸ். திருமண்டல கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேராயர் தரப்பினருக்கும், லே செயலாளர் ஜெயசிங் தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த சூழலில், லே செயலாளர் ஜெயசிங்கின் ஆதரவாளரான தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்தை பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய தாளாளரை நியமித்தார் பேராயர் பர்னபாஸ். ஆனால், புதிய தாளாளர் பதவியேற்கச் சென்றபோது, தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் தரப்பினருக்கும், பேராயர் தரப்பினருக்கும் இடையே மோதலும், கைகலப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து, பேராயருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் சில அறைகளை ஞானதிரவியம் தரப்பினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டுச் சென்றனர். எனவே, அந்த அறைகளை மீண்டும் திறக்க வேண்டும், அலுவலக பணிகளை முடக்க கூடாது என்று பேராயர் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகரான காட்பிரே நோபுள், பாளையங்கோட்டையிலுள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்திற்கு சென்று, திருமண்டல அலுவலக அறைகளை பூட்டி வைப்பதால் பணிகள் முடக்கப்படுவதாக கூறியும், உடனடியாக அறைகளை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் கூறினார்.
அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர், திடீரென காட்பிரே நோபுளை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும், அவரை விடாமல் ஓட ஓட விரட்டி தாக்கியது தி.மு.க. எம்.பி.யின் ரவுடி கும்பல். பின்னர், மத போதகர் காட்பிரே நோபுள் தனது ஆதரவாளர்களுடன் சென்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம், புகார் அளித்தார். இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மத போதகர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.