திருப்பத்தூரில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் அப்பகுதி மக்களை ஜாதி பெயரைச் சொல்லி திட்டயதாகக் கூறி, பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டினர்.
திருப்பத்தூர் மாவட்டம் பழைய அத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த பெண்களை, அப்பகுதி தி.மு.க. பிரமுகர் சாமு என்பவர், ஜாதி பெயரை கூறி திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், குடி போதையில் இருந்த அவர், அப்பெண்களிடம் ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், சாமு மீது போலீஸில் புகார் அளித்தனர்.
மேலும், சாமுவை கண்டித்து 200-க்கும் மேலான பெண்கள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த அரசு பேருந்தையும் சிறைப்பிடித்தனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாமுவை கைது செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பெண்கள் தெரிவித்தனர். கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.