பள்ளிக்குள் குப்பை, கழிவுநீர்: தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்… தி.மு.க. பிரமுகர் அராஜகம்!

பள்ளிக்குள் குப்பை, கழிவுநீர்: தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்… தி.மு.க. பிரமுகர் அராஜகம்!

Share it if you like it

பள்ளிக்குள் குப்பை கொட்டியதையும், கழிவுநீரை விட்டதையும் தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியரை தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சியினரின் அராஜகம் தலைவிரித்தாடி வருகிறது. போலீஸ்காரர்கள் முதல் அரசு ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் வரை தி.மு.க.வினரிடம் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல தி.மு.க.காரர்கள் சொல்வதுதான் சட்டமாக இருந்து வருகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், அரசு அதிகாரி ஒருவரை ஜாதியைச் சொல்லி திட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், பள்ளியில் குப்பை கொட்டியதை தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியரை, மாணவர்கள் முன்பு தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி 17-வது வார்டு கைகாட்டிபுதுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் அருகே குடியிருந்து வரும் மக்கள், நீண்டகாலமாகவே பள்ளி வளாகத்துக்குள் குப்பையை கொட்டி வருவதோடு, கழிவுநீரையும் திறந்து விடுவதாக புகார் இருந்து வருகிறது. இது தொடர்பாக, மேற்படி பகுதியில் வசிப்பவர்களிடம் பள்ளிக்குள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும், பள்ளிக்குள் குப்பைகளை கொட்டுவதை அப்பகுதி மக்கள் நிறுத்தவில்லை. இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பள்ளிக்குள் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக, மாணவர்கள் சிலர் குடியிருப்பு வாசிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசியான பாஸ்கர் என்பவர், பள்ளிக்குள் நுழைந்து 7 மாணவர்களை தாக்கி இருக்கிறார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் கொடுத்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தங்களது பிள்ளைகளை தாக்கிய விவரம் பெற்றோருக்குத் தெரியவரவே, நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் கூடியிருக்கிறார். பின்னர், குப்பைகளை கொட்டுவது தொடர்பாகவும், தங்களது பிள்ளைகளை தாக்கியது தொடர்பாகவும், மேற்கண்ட குடியிருப்பு வாசிகளிடம் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த மேற்படி வார்டு கவுன்சிலர் தி.மு.க.வைச் சேர்ந்த ரமணியின் கணவர் துரைசாமி, பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பள்ளி வளாகத்தில் காரசார விவாதம் ஏற்பட்டது.

அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் குறுக்கிட்டு, பள்ளியில் குப்பைகளை கொட்டுவது சரியா என்று தட்டிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த துரைசாமி, தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனின் கழுத்தை பிடித்து இறுக்கியதோடு, தள்ளிவிட்டு தாக்கவும் முயன்றார். இதனால், பள்ளி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பெற்றோர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். கவுன்சிலரின் கணவர் துரைசாமி, தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனின் கழுத்தைப் பிடித்து இறுக்கி தள்ளிவிடும் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும் தி.மு.க. கவுன்சிலர் கணவரின் அராஜக செயலை கண்டித்து பின்னூட்டம் இட்டு வருகின்றனர். மேலும் பலரும், தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வசைபாடி வருகின்றனர்.


Share it if you like it