திருப்பூரில் இரவு நேரங்களில் ட்ரோன் கேமரா மூலம் பெண்களை படம் பிடிப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவில் அமைந்திருக்கிறது புலிப்பார் கிராமம். பொதுவாக கிராமங்களைப் பொறுத்தவரை, ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் திறந்த வெளி கழிப்பிடம்தான். அதிலும் பெண்கள் ஒதுங்கும் நேரம் ஆள் அரவற்ற இரவு நேரமும், விடிந்தும் விடியாததுமான அதிகாலை நேரமும்தான். மற்றபடி பகல் நேரங்களில் அவசரத் தேவைக்கும், குளிப்பதற்கும் சுற்றிலும் மறைக்கப்பட்டிருக்கும் ஓலைக்கொட்டைதான். அப்படியே ஒரு சிலர் கழிப்பறை மற்றும் குளியலறை கட்டியிருந்தாலும் மேல்புறம் ஓப்பனாகத்தான் இருக்கும்.
இந்த நிலையில்தான், இரவு பெண்கள் ஒதுங்கும் நேரம் முதல் 11 மணி வரை ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி பெண்களை போட்டோ எடுத்து வருவதாக குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது. இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள், திருப்பூர் கலெக்டரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவில், “புலிப்பார் ஊராட்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து பறக்கின்றன. இந்த விமானங்கள் வீடுகளின் மேல்புறம் தாழ்வாக புகைப்படம் எடுப்பது போல பறக்கின்றன.
நாங்கள் வசிக்கும் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் கழிப்பறை மற்றும் குளியலறைகளில் மேற்கூரை இருக்காது. நிலைமை இப்படி இருக்க, இரவு நேரங்களில் ட்ரோன் விமானங்கள் பறப்பதால், வீட்டிலுள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் அவசரத் தேவைக்கு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், சிறு குழந்தைகளும் என்னமோ ஏதோ என்று அச்சத்தில் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஆகவே, மேற்படி ட்ரோன்கள் எதற்காக பறக்கின்றன என்பது குறித்து விசாரணை நடத்தி, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும்” என்று வலுயுறுத்தி இருக்கிறார்கள். இந்த விவகாரம்தான் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.