திருப்பூரில் விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதோடு, சிலையையும் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்டது சர்க்கார் பெரியபாளையம். இங்குதான் மிகவும் பழைமையானதும், புகழ்பெற்றதுமான சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகவே, இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இக்கோயிலின் அருகே காலியாக இருந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விநாயகர் கோயில் ஒன்று கட்டப்பட்டது. இக்கோயிலில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில்தான், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டி இருப்பதாகக் கூறி, வருவாய்த்துறையினர் கோயிலை இடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்று காலையில் வந்த வருவாய்த்துறையினர், கோயிலை இடித்து அப்புறப்படுத்தியதோடு, விநாயகர் சிலையையும் எடுத்துச் சென்று விட்டனர். கோயில் இடிக்கப்படும் தகவல் கிடைத்ததும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் திரண்டனர். பின்னர், கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களிடம் எந்தவொரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் கோயில் இடித்ததை கண்டித்தும், கோயிலில் இருந்து அகற்றப்பட்ட விநாயகர் சிலையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து முன்னணி அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் காரணமாக திருப்பூர் – ஊத்துக்குளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.