பட்டியல் சமூகத்தை சேர்ந்த அரசு அலுவலரிடம் தீண்டாமையை கடைப்பிடித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நபர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
பட்டியல் சமூக மக்களின் உண்மையான பாதுகாவலர்கள், நாங்கள் தான் என்று ஊர்தோறும் பேசி வரக்கூடியவர்கள் தி.மு.க.வினர். இவர்கள், மேடையில் பேசுவது ஒன்று மேடையை விட்டு கீழ் இறங்கி வந்தால், நடந்து கொள்ளும் விதம் வேறொன்று என்பது அனைவரும் அறிந்த உண்மை. தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைப்பது இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரிடம் தீண்டாமையை கடைப்பிடித்து உள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது; போக்குவரத்துறை அமைச்சர் ராஜகணப்பன் என்னை 5 முறைக்கு மேல் நீ எஸ்.சி பிரிவை சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி பேசினார். என்னை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். தொடர்ந்து, எஸ்.சி என்பதை சுட்டிக்காட்டினார். என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு, மனக்காயத்தை நான் அடைந்தது இல்லை என வேதனையுடன் அந்த அரசு ஊழியர் தெரிவித்துள்ளார்.
இக்காணொளி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. இந்நிலையில், சாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்து, உடனே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டன போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதி மற்றும் சுயமரியாதையை பாதுகாக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான் என்று மேடைதோறும் பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இது குறித்து எப்பொழுது தோழமை சுட்டுதல் செய்வார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.