தொகுப்பு வீடு கட்ட அப்ரூவல் வழங்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ. ஆகியோர் மீது பகீர் புகார் எழுந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடத்தொங்கி விட்டது. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் அதிகளவில் வெற்றிபெற்றதால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது. போலீஸாக இருந்தாலும், வருவாய் உள்ளிட்ட எந்தத் துறை அதிகாரிகளாக இருந்தாலும் சரி, தி.மு.க. நிர்வாகிகள் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை யாருமே மதிப்பதில்லை. கான்ட்ராக்ட் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கமிஷன் வராமல் அப்ரூவல் கொடுப்பதில்லை. இப்படித்தான் வீடு கட்ட அப்ரூவல் கேட்டு வந்த ஒருவரிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றியச் செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தாலுகாவில் அமைந்திருக்கும் அழுந்தலைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். இவரது தாய் சரஸ்வதி அப்பகுதியில் 35 வருடங்களாக டீக்கடை நடத்தி வந்திருக்கிறார். இந்தக் கடையை தி.மு.க.வினர் இடித்து அகற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அரவிந்த்ராஜுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான ஆணை வந்திருப்பதாகவும், அதற்கு பஞ்சாயத்துத் தலைவரிடம் அப்ரூவல் வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஆகவே, அப்ரூவல் கேட்டு, பஞ்சாயத்துத் தலைவரை நாடி இருக்கிறார் அரவிந்த் ராஜ். ஆனால், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு தி.மு.க.வைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவரும், ஒன்றியத் தலைவரும், எம்.எல்.ஏ.வும் மிரட்டியதாக தாய் சரஸ்வதியுடன் வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதான் திருச்சி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து அரவிந்த் ராஜிடம் கேட்டதற்கு, “முதல்வர், பாரத பிரதமரிடம் கூட போய் சொல்லிக்கொள். நான் தர முடியாது, முடிந்தால் வாங்கிக் கொள் என்று சவால் விடுகிறார். வீடு கட்ட அப்ரூவல் வேண்டுமானால் தனக்கு 50,000 ரூபாயும், அதிகாரிகளுக்கு 50,000 ரூபாயும் என மொத்தமாக 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பஞ்சாயத்துத் தலைவரும் தி.மு.க., ஒன்றியத் தலைவரும் தி.மு.க., எம்.எல்.ஏ.வும் தி.மு.க. அதனால அவங்க வச்சதுதான் சட்டமாக இருக்கிறது. அமைச்சர் நேருவிடம் சொல்லலாம் என்று போனால், அவரு பார்க்க நேரமில்லைன்னு சொல்லிட்டாரு. நாங்க சாவுற நிலைமையில இருக்கமுங்க என்று சொன்னால், செத்தா சாவுங்க அப்புடின்னு சொல்றாங்க” என்றார் பரிதாபமாக.
அரவிந்த் ராஜின் தாய் கூறுகையில், “எல்லாரும் கட்சிப் பதவியை வச்சுக்கிட்டு மிரட்டுறாங்க. நீங்கள்லாம் இருந்த என்னாகப்போகுது. எழுதிக் குடுத்துவிட்டு சாவுங்க அப்படிங்கிறாங்க” என்றார் வேதனையுடன். தி.மு.க.வினரின் அராஜகம் ஆரம்பித்து விட்டது. இனி இது எங்கு போய் முடியுமோ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், அப்பாவி சாமானிய மக்களும்.