பாரதப் பிரதமர் மோடி குறித்து அவதூறு செய்தி பரப்பிய திரிணமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேயை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் மோர்பியில், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தொங்கும் பாலம், கடந்த அக்., 30-ல் அறுந்து விழுந்தது. இந்த நிகழ்வில், ஆண், பெண், சிறுவர்கள் என்று சுமார் 135 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து நடந்த இடத்தை பாரதப் பிரதமர் மோடி கடந்த நவ., -1ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின்பு, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
பிரதமர் மோடி வந்து சென்ற சில மணி நேரத்திற்கு குஜராத் அரசு ரூ.30 கோடி செலவு செய்துள்ளது எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது ; ‛மோர்பிக்கு பிரதமர் மோடி வந்து சென்ற சில மணிநேரத்திற்கு ரூ.30 கோடி செலவானதாக ஆர்.டி.ஐ மூலமாக தெரியவந்துள்ளது. அதில், ரூ.5.5 கோடி வரவேற்பு, நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் போட்டோவுக்காக செலவாகியுள்ளது. உயிரிழந்த 135 பேரின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி அளவிற்கே செலவாகியுள்ளது. இதைவிட மோடி வந்து சென்ற செலவு அதிகம்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
கோகலேயின் இந்த கருத்து மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருந்து. அந்த வகையில், பிரஸ் இன்பர்மேஷன் பீரோ.,வின் (பி.ஐ.பி) உண்மை கண்டறியும் குழு, இந்த தகவல் போலியானது என்றும், ஆர்.டி.ஐ. இது போன்ற எந்த தகவலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து, போலியான செய்தியை பரப்பி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற சாகேத் கோகலேவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து, குஜராத் போலீஸார் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவரை கைது செய்து அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.