கவிஞரின் வலிமையான சொற்கள் மூலமாக, பல்லாயிரம் இளைஞர்களை, தேச பக்தியின் பாதையில் செல்ல செய்து, சுதந்திர இந்தியாவின் சுந்தர கனவுகளை காட்டி, லட்சக்கணக்கான மக்களை, பாரத தேசத்தின் சுதந்திரத்திற்காக நிற்க செய்த, தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதி, ஒரு மாநிலக் கவிஞர் மட்டுமல்ல, பாரதி, தேசியக் கவிஞரும் ஆவார்.
சின்னசாமி சுப்பிரமணிய பாரதி, 1882 டிசம்பர் 11 அன்று, எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் மற்றும் லட்சுமி அம்மாளுக்கு, பிறந்தார். குழந்தை பருவத்தில், அவர் “சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்.
சரஸ்வதி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்ட இளைய சுப்பையா, தனது ஏழு வயதில், கவிதைகளை எழுதத் தொடங்கினார். எட்டயபுர ராஜா சபையில் நடந்த ஒரு விவாதத்தில், 11 வயதான சுப்பையா, சிறப்பாக தன் வாதத்தை, சான்றோர்களுக்கு முன் வைத்ததினால், எட்டயபுரத்து ராஜா, அந்த சிறுவனின் திறமையை, “அன்னை சரஸ்வதியின் அருள்” என்ற வகையில், அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை கொடுத்து, கௌரவித்தார். அன்று முதல், அந்த கவிஞன் “பாரதி” என அழைக்கப் பட்டார்.
15 வயதில் பாரதி, 7 வயதான செல்லம்மாளை மணந்தார். பாரதி, பெனாரஸில் தங்கிய இரண்டு வருட காலத்தில் சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் இந்தி கற்றுக் கொண்டார். ஆன்மிகம் மற்றும் தேசியம் பற்றிய ஆழமான ஞானமும் பெற்றார். “சுதேசி மித்ரன்”, ஆங்கில மாத இதழான “பால பாரதம்” போன்ற பத்திரிகைகளில் சுப்பிரமணிய பாரதி, துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். பாரதி, காங்கிரஸ் அமர்வுகளில், கலந்து கொண்டார். 1907 ல், சூரத் அமர்வின் போது, காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. சுப்பிரமணிய பாரதி, பால கங்காதர திலகரின் அணியை ஆதரித்து நின்றார்.
‘முண்டாசு கவிஞர்’ வறுமையில் வாடினாலும், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பராமரிக்க முடியாமல் இருந்த போதும், 1908 ல் ஸ்வராஜ் தினம் ஏற்பாடு செய்யப்பட்ட போது, அச்சிடப்பட்ட அவரது கவிதைகளை, இலவசமாக விநியோகிப்பதன் மூலம், தேசத்திற்கு தனது அர்ப்பணிப்பை நிரூபித்தார்.
“இந்தியா” என்ற செய்தித்தாளில், பாரதியாரின் எழுத்துக்கள் மூலமாக, வாசகர்களிடையே தேசிய உணர்வின் வலுவான தாக்கத்தை நிரம்ப செய்ததால், ஆங்கிலேயர்கள், பாரதியாரை கைது செய்ய வருவதை அறிந்த கவிஞர், பாண்டிச்சேரிக்கு தப்பினார்.
பிரிட்டிஷ் அரசாங்கம், “இந்தியா” செய்தித்தாள் மற்றும் தமிழ் தினசரி நாளிதழ் “விஜயா” ஆகியவற்றுக்கு தடை விதித்தது. புதுச்சேரியில், அரவிந்தர், லாலா லஜபத் ராய் மற்றும் வி.வி.எஸ்.அய்யரை பாரதி சந்தித்தார். அவர், வேத இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார் மற்றும் வேதம், பகவத் கீதை, பதஞ்சலியின் யோக சூத்திரத்தை தமிழுக்கு மொழி பெயர்த்தார்.
1918 ல், பாரதி புதுச்சேரியில் இருந்து, கடலூருக்குள் நுழைந்த போது, அவர் கைது செய்யப்பட்டு, மூன்று வாரங்களில், சி.பி.ராமசாமி ஐயரின் முயற்சியால், விடுவிக்கப் பட்டார்.
1919 ல், அவர் காந்திஜியை சந்தித்தார்.
1920 ல், மெட்ராஸில் “சுதேசி மித்திரன்” என்ற பத்திரிகையின் ஆசிரியராக, மீண்டும் பணியாற்ற, பாரதி தொடங்கினார்.
திருவல்லிக்கேணியில் வசித்து வந்த பாரதி, வழக்கம் போல், பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்ற போது, ஒரு நாள் அவர் கோவில் யானைக்கு, தேங்காய் ஊட்டினார். திடீரென அந்த யானை, அவரைத் தாக்கியதால், அவர் கீழே விழுந்தார். விழுந்ததில், காயங்கள் ஏற்பட்டது.
அதன் பிறகு, அவரது உடல் நிலை, மோசம் அடைந்தது. செப்டம்பர் 11, 1921 நள்ளிரவு 1 மணியளவில், சிறந்த கவிஞர், தனது இறுதி மூச்சை விட்டார். சுப்பிரமணிய பாரதி, தனது சமூகத்தின் வழக்கங்களை மீறியதால், அவரை சமூக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அவரது இறுதிச் சடங்கில், வெறும் 14 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சீனிவாசச்சாரி, திருமலை சாரியார் போன்ற மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் பாரதி நட்புறவில் இருந்தார்.
சமூக சமத்துவத்தை ஆதரித்து, பெண்களின் சம உரிமைக்காகவும், குழந்தை திருமணத்தை கண்டித்தும், விதவை மறுமணத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார் பாரதி. நாடு முன்னேற, அறிவியல் முன்னேற்றங்களின் அவசியத்தையும், அவர் ஆதரித்தார்.
இந்தியர்கள் அனைவரும், ஒன்றாக நின்று இருந்தால், இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து, விடுதலை பெற்றிருக்கும் என்பது, அவரது கருத்தாக இருந்தது. இந்துக்களின் நடுவில் இருந்த, ஏற்ற தாழ்வு தான், அந்த ஒற்றுமையின்மையின் காரணம். மேலும், இந்த ஜாதி ஏற்றத் தாழ்வு வந்ததே, சில சுயநலவாதிகளின் பொறுப்பற்ற செயல்களால், வேதங்களையும் பகவத் கீதையையும் முறையாக, நேர்மையாக விளக்கி இருந்தால், இத்தகைய, ஜாதி வேற்றுமைகள் வந்து இருக்காது, என நம்பினார் பாரதியார்.
பாரதி, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்று அழைக்கப் படலாம். தெய்வீகம், தத்துவம், இயற்கை மற்றும் தேசியம் ஆகியவற்றின் சக்தி வாய்ந்த தத்துவங்களை, எளிய தமிழ் சொற்களில் வெளிப் படுத்தி, “பாஞ்சாலி சபதம்”, “குயில் பாட்டு”, “கண்ணன் பாட்டு”, “சுதேச கீதங்கள்”, ” விடுதலை பாடல்கள்” போன்ற சிறந்த தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை, தமிழ் நாட்டிற்கும், பாரத தேசத்திற்கு சமர்பித்தவர், மகாகவி சுப்ரமணிய பாரதி.
1949 ல், மாநில அரசு, பாரதியாரின் படைப்புகளை, தேசிய மயமாக்கியது. இந்த வருட, பாரதியின் நூற்றாண்டு நினைவு நாளில், அவரின் புகழை எங்கும் பரப்புவோம்…
- M. விஜயா