பதவி உயர்வை பாதிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராடி வந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இதற்கு அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :
ஜனநாயக முறையில் போராட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பறிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றும் வகையிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத திமுக அரசு, பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படை கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட முயன்ற ஆசிரியர்களை ஒடுக்க முயற்சிப்பது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்றாண்டுகளை கடந்த பின்பும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதோடு போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை குற்றவாளிகளை போல கைது செய்வது எந்த வகையில் நியாயம்? என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, கைது செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.