அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் டார்ச்சர் செய்வதை வரவேற்கிறேன் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியது, கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு நிறைவு விழா, ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவில், வாசகர்களின் கேள்விகளுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பதிலளித்து பேசினார். அப்போது, பாரத பிரதமர் மோடி குறித்து வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி, ”மோடியின் தொடர் வெற்றிக்குக் காரணம் அவரது அயராத உழைப்பு. ஆனால், அவர் வெளியில் சொல்வதில்லை. இப்போதெல்லாம் திடீரென அரசியல்வாதியாக வருகின்றனர். தமிழகத்தில் லஞ்சம் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் மோடி போன்ற ஒருவர்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சோ கூறுவார்” என்றார்.
தொடர்ந்து, பெண்கள் அரசியல் வருவதற்கு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “பெண்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால், இத்தனை சதவிகிதம் என வகுக்க முடியாது. அப்படி கொடுத்தால், தகுதி இல்லாதவர்களும் அரசியலில் நுழைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், ஒரு காலத்தில் அரசு அலுவலகங்களில் பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். தற்போது டிமாண்ட் செய்து கேட்கும் நிலை இருக்கிறது. மேலும், பெண்களுக்கு குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இதுதான் நம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது” என்றார்.
அதேபோல, அண்ணாமலையை பத்திரிகையாளர் டார்ச்சர் செய்வது பற்றிய கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி, “அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் இம்சை செய்கிறார்கள் என்றால், அவர் வளர்ந்து வருகிறார் என்று பொருள். எதிர்ப்பில்தான் அனுபவம் வரும். எனவே, அண்ணாமலைக்கு அந்த அனுபவம் வரட்டும். அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு வரட்டும். அதை நான் வரவேற்கிறேன். மாண்புமிகு என்ற சொல் எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியாது. அவர் மாண்புமிகு என்று இல்லாமல் அந்த இடத்திற்கு போக வேண்டும் என்று விரும்புகிறேன். அண்ணாமலை தனிப்பட்ட வளர்ச்சியை விட அவருக்கு பின்னால் இருக்கும் சித்தாந்தம் வளர வேண்டும். அந்த நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது” என்றார்.