தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரத்தை கட்சியின் தலைவர் விஜய் பரிசாக வழங்கினார்.
தவெக சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து, பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள், ஊக்கத்தொகை வழங்கினார்.
முதல்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பம்சமாக 9 மாணவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் வைர கம்மலை விஜய் பரிசாக அளித்தார்.
அந்த வகையில் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை மாவட்டத்தை சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மலை விஜய் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்தலில் மாநில அளவில் முதல் 6 இடங்களை பிடித்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல் காவியஶ்ரீ , ஈரோடு கோபிகா, ராமநாதபுரம் காவியா ஜனனி, திருநெல்வேலி சஞ்சனா ஆயுஷ் ஆகியோருக்கு வைர மோதிரங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் சின்னத்துரைக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது
இந்நிலையில் விழாவில் கலந்து கொள்ள வருபவர்களை சோதனை செய்வதற்காகவும் பாதுகாப்புக்காகவும் துபாயிலிருந்து பவுன்சர்களை வரவழைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. மேலும் நிகழ்ச்சிக்கு வருபவர்களை நீட் தேர்வு எழுத உள்ளே அனுமதிப்பது போல் தீவிர சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.
மேலும் மொபைல் போன், கேமரா, பேனா, பேப்பர்,உள்ளிட்ட பொருட்களை உள்ளே எடுத்து செல்ல தடை செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
மிகவும் கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதி மார்க் எடுத்து பிரபலமான நடிகர் கையால் விருது வாங்க போகிறோம் என்ற குஷியில் துள்ளி குதித்து வந்த மாணவ கண்மணிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இந்த நிகழ்வு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனர் பலத்த காற்று காரணமாக சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவன் மீது விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.