ஏழை மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அரசு மருத்துவமனைகள் உள்ளது. ஆனால் தற்போது உள்ள அரசு மருத்துவமனைகளின் நிலையை பார்த்தால் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல், புற்றுநோய், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனிவார்டு, மகப்பேறு வார்டு என அனைத்து சிகிச்சைகளுக்கும் தனித்தனியான கட்டடங்களில் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாடிப்பட்டி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த இரண்டு கர்ப்பிணிகளுக்கு இதயநோய் பாதிப்பு இருந்ததால் அவர்கள் இருவரையும் ஒரே ஸ்ட்ரெச்சரில் உட்கார வைத்து இதயநோய் பிரிவு, ஸ்கேன் மற்றும் பரிசோதனைக்காக மருத்துவமனை பணியாளர் அழைத்துச் சென்றுள்ளார். கர்ப்பிணி பெண்களை பாதுகாப்போடு அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில், ஒரே ஸ்ட்ரெச்சரில் இரு கர்ப்பிணி பெண்களை அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. “பள்ளமான தார் சாலை மற்றும் தாழ்வு பகுதியில் ஆபத்தான முறையில் ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து மருத்துவமனை பெண் பணியாளர் ஒருவர் முன்னே இழுத்துச் செல்ல, அதன் பின்னே நோயாளியின் உறவினர் தள்ளிக் கொண்டு சென்றனர். எங்கே ஸ்ட்ரெச்சரின் சக்கரம் முறிந்து விழுந்து விடுவோமோ என்ற உயிர் பயத்தில் கர்ப்பிணி பெண்கள் செல்கின்றனர்.
தாயை சுமந்து சென்ற மகள் :-
கடந்த மே மாதம் ஈரோடு பெரிய வலசை பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி வேலை நிமித்தமாக கடந்த 27ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் மூதாட்டியின் காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மூதாட்டியை மீட்டு அவரது மகள் வளர்மதி ஆட்டோ மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
அப்போது ஊழியர்கள் ஸ்ட்ரச்சர் மற்றும் வீல் சேர் தராததால் மூதாட்டியை அவரது மகள் ஸ்வர்ணம் தூக்கி சென்றது சமூக வலைதளங்களில் வைரலானது. அதனால் பெரும் சர்ச்சையாக மாறியது.
மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை :-
இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்தனர்.12 பேருக்கு பார்வை பறிபோனது. இன்னும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருந்துகளும், மருத்துவ சாதனங்களும் இல்லாத சூழல் நிலவுவதாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்துவிட்டு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.
மருத்துவர்கள் பற்றாக்குறை :-
இதுபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், பொது மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், பல் மருத்துவர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்து பணி செய்ய வேண்டிய இடத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சிறு நோய்க்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகளை கூட ராமநாதபுரம், மதுரை, தேவகோட்டை போன்ற இடங்களுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் அவலம் நீடித்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மருத்துவரான தூய்மை பணியாளர்கள் :-
ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் காணொளி இணையத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் சுத்தம் செய்வதற்காக வரும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வது, ட்ரிப்ஸ் போடுவது போன்ற பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.