இதுக்கு நான் என்ன பதில் சொல்றது… காமெடி நடிகர் வடிவேலு பாணியில் தி.மு.க. எம்.பி. திணறல்!

இதுக்கு நான் என்ன பதில் சொல்றது… காமெடி நடிகர் வடிவேலு பாணியில் தி.மு.க. எம்.பி. திணறல்!

Share it if you like it

நல்ல நாள், நேரம் பார்த்து உதயநிதி அமைச்சராகப் பதவியேற்றது தொடர்பாக, தனியார் யூடியூப் சேனல் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, இதுக்கு நான் என்ன பதில் சொல்றது என்று தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் தடுமாறிய காணொளி ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தர்மபுரி தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் எஸ்.செந்தில்குமார். தி.மு.க.வைச் சேர்ந்த இவர், கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டபோது, தனது தாத்தா வடிவேல் கவுண்டர் பெயரைச் சொல்லி ஹிந்துக்களிடம் ஓட்டுக்கேட்டு வெற்றிபெற்றார். ஆனால், வெற்றிபெற்ற பிறகு, ஹிந்துக்களுக்கு நேர் எதிராக செயல்படத் தொடங்கினார். உதாரணமாக, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் குளம் தூர்வாரும் பணிக்கு அர்ச்சகரை வைத்து பூமிபூஜை போட்டபோது, எங்கே கிறிஸ்தவ பாதிரியார், எங்கே முஸ்லீம் இமாம் என்று கேட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் அதிநவீன நூலகம் கட்ட பூமிபூமை போட்டபோது, செங்கற்களை காலால் எட்டி உதைத்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, இனிமேல் இதுபோன்று ஹிந்து சடங்களை செய்யும் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காதீர்கள் என்று அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனால், ஹிந்துக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார் செந்தில்குமார். மேலும், விநாயகர் சதுர்த்திக்கு இந்து சமய அறநிலையித்துறை அமைச்சர் சேகர் பாபு வாழ்த்துச் சொன்னபோது, தி.மு.க.வினர் அனைவரும் கருணாநிதியின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சருக்கே அட்வைஸ் கொடுத்தார். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் தான், ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லவ வேண்டியது தனது கடமை என்று சொல்லி செந்தில்குமாரின் மூக்கை உடைத்தது தனிக்கதை.

இந்த நிலையில், தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி, அமைச்சராக பதவியேற்கும் விழா நடந்தது. இந்த விழாவை நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து வேதவிற்பன்னர்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அமர்களமாக நடத்தினார்கள். அப்போதே, செந்தில்குமாரை டேக் செய்த நெட்டிசன்கள், இதற்கு என்ன சொல்கிறீர்கள்? உதயநிதியை கண்டிப்பீர்களா என்று வெளுத்து வாங்கினார்கள். இந்த சூழலில்தான், தனியார் யூடியூப் சேனல் ஒன்று தி.மு.க. எம்.பி. செந்தில்குமாரிடம் பேட்டி எடுத்தது. அப்பேட்டியில், உதயநிதி நல்ல நாள், நேரம் பார்த்தது தொடர்பாக, செந்தில்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குத்தான் பதில் சொல்ல முடியாமல், வடிவேலு பாணியில் ‘இப்ப இதுக்கு நான் என்ன பதில் சொல்றது’ என்று தட்டுத் தடுமாறிய செந்தில்குமார், ‘உதயநிதி கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர். அவரது இணையரும் கடவுள் மறுப்பாளர்தான். அவரது தந்தையாரும் கடவுள் மறுப்பாளர்தான். ஆனால், அவரது தாயார் கடவுள் பக்தி கொண்டவர். ஆகவே, தாயின் விருப்பப்படி அவர் பதவியேற்றிருக்கலாம்’ என்று வாய்க்கு வந்ததைச் சொல்லி சமாளித்திருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் செந்தில்குமாரை காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஒப்பிட்டு கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it