மாமன்னன் திரைப்படம் குறித்த கேள்விக்கு செத்த பாம்பை அடிப்பதே தி.மு.க.வுக்கு வேலையாகி போய்விட்டது என்று புதிய கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இத்திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அதோடு, திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அப்படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், சிவாஜி, கமல் நடித்த தேவர்மகன் திரைப்படம் குறித்த கருத்து அச்சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் கமல் மௌனமாக இருந்ததும், அவர் மீது விமர்சனங்களை கிளப்பியது.
இது ஒருபுறம் இருக்க, மாமன்னன் திரைப்படத்தின் கதை, அ.தி.மு.க. ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றிய கதை என்றும், அ.தி.மு.க.வில் நடந்த சம்பவத்தை வைத்து தி.மு.க. ஆதாயம் அடையப் பார்க்கிறது என்கிற விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, செத்த பாம்பை அடிப்பதே தி.மு.க.வுக்கு வேலையாகிப் போட்விட்டது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கொடியங்குளத்தில் குடி தண்ணீர் கிணற்றில் விஷம் கலந்தார்கள். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடினோம். எந்த திரைப்படத்திலாவது மறைமுகமாவது காட்டினார்களா? அப்படி இருக்க, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கடந்த கால கலவரங்களை ஏன் திரைப்படங்களாக எடுக்கிறார்கள். செத்த பாம்பை அடிப்பதே தி.மு.க.வுக்கு வேலையாகிப் போய்விட்டது என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.