2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாநிலம் தழுவிய மோட்டார் சைக்கிள் பேரணியை, தமிழக விளையாட்டு அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். டிசம்பரில் நடைபெற உள்ள, ‘மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில், தி.மு.க., இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து பேரணியை தொடங்கி வைத்தார், மேலும் இது மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளையும் கடந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளங்களில் உதயநிதியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
திருச்சி மாவட்டத்தின் உள்கட்டமைப்புக்கும், நெடுஞ்சாலை பணிகளுக்கும், வீடு, குடிநீர், கழிப்பறை வசதி, முத்ரா கடனுதவி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, மருத்துவக் காப்பீடு என மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளார்கள். ஆனால் திமுக, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொந்த மாவட்டமான திருச்சியில், சுமார் 3,647 குழந்தைகள், கல்வியை பாதியில் நிறுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில், 18 வயசுக்கு உட்பட்ட பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தும் சிறுவர் சிறுமியர்கள் எண்ணிக்கை, 1.3 லட்சம் என சமீபத்திய ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால், அமைச்சர், உதயநிதியின் புதிய புல்லட் பாண்டி அவதாரத்துக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.