தற்போது உக்ரைனில் போர் நடக்கும் சூழலில் தமிழக மாணவர்களை காப்பாற்ற குழு அமைத்திருக்கும் தி.மு.க. அரசு, இலங்கை போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ஆகவே, இந்தியாவிலிருந்து உக்ரைன் நாட்டுக்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கச் சென்ற மாணவர்கள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அங்கு சென்ற இந்தியர்களையும் மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்காக, ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறார் பாரத பிரதமர் மோடி. அதன்படி, உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை, அதன் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா போன்ற நாடுகளுக்கு புலம் பெயரச் செய்து வருகின்றனர். பின்னர், அங்கெல்லாம் இந்திய விமானங்கள் அனுப்பப்பட்டு, இந்தியர்களை மீட்டு வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.
மேலும், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜுஜு, ஹர்தீப் சிங் பூரி, வி.கே.சிங் ஆகியோரை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி, அங்கு தஞ்சமடைந்திருக்கும் இந்தியர்களுக்கு ஆறுதலும், தைரியமும் கூறி, இந்திய விமானங்களில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். அதன்படி, இதுவரை 15 விமானங்கள் மூலம் மாணவர்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் அடக்கம். மத்திய அரசின் இத்தகைய மீட்பு நடவடிக்கைக்கு மாநில முதல்வர்கள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். அவ்வளவு ஏன், பாரத பிரதமர் மோடியை தனது எதிரியாகக் கருதும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட, மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, உக்ரைன் நாட்டில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்களை மீட்க குழு அமைத்திருக்கிறார். இதில், 3 எம்.பி.க்களும், ஒரு எம்.எல்.ஏ.வும், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இடம் பெற்றிருக்கிறார்கள். இதுதான் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது, இந்தியாவிலுள்ள 30 மாநிலங்களும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று, அமைதியாக இருக்கும்போது, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு மட்டும் குழு அமைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலரோ, மத்திய அரசின் தயவு இல்லாமல் இவர்கள் எப்படி உக்ரைன் போவார்கள், ஒருவேளை கள்ளத் தோணியில் போவார்களோ? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ, இலங்கை ராணுவம் அந்நாட்டில் இருக்கும் தமிழர்களை கொன்று குவித்தபோது, நம்மைக் காக்க தமிழ்நாடு ஏதாவது செய்யாதா என்று ஏங்கித் தவித்தார்கள். அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதானே நடந்தது. ஆனால், குழு அமைக்காமல் உண்ணாவிரத நாடகம் போட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தவிர, அடுத்த வாரம் நடக்கும் தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக குழுவுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய என்ற தலைப்பில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், குழு அமைத்த தி.மு.க. அரசை நெட்டிசன்களும் வறுத்தெடுத்து வருகின்றனர்.