மோடியால்தான் போரை நிறுத்த முடியும்: உக்ரைன் தூதர்!

மோடியால்தான் போரை நிறுத்த முடியும்: உக்ரைன் தூதர்!

Share it if you like it

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த மோடியால்தான் முடியும். ஆகவே, மோடியின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் நாடு விரும்புகிறது. ஆனால், இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து, சமீபகாலமாக திடீரென உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வந்தது ரஷ்யா. இதனால், வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதனிடையே, இன்று காலை திடீரென போரை துவங்க உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதைத் தொடர்ந்து, ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தத் துவங்கினர். உக்ரைன் தலைநகர் கீவ் மீது முதல் தாக்குதல் நடத்திய ரஷ்ய வீரர்கள், தொடர்ந்து, டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யா, தரைவழி தாக்குதலிலும், வான்வழி தாக்குதலிலும் ஈடுபட்டு வருவதால், சமாளிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, மோடியால் மட்டுமே போரை நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போதைய தருணத்தில், இந்தியாவின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயக அரசுக்கு எதிராக சர்வாதிகார ஆட்சியின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், இந்தியா தனது உலகளாவிய பங்கை முழுமையாக ஏற்க வேண்டும். மோடி ஜி உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவர். எத்தனை உலகத் தலைவர்கள் சொல்வதை புடின் கேட்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மோடி ஜியின் நிலை, அவரது வலுவான குரல், படினை குறைந்தபட்சம் சிந்திக்கவாவது வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, இந்திய அரசாங்கத்தின் சாதகமான அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் மோடியின் பலமும், மரியாதையும் உலக நாடுகளுக்குத் தெரிகிறது. ஆனால், உள்ளூர் உ.பி.ஸ்களும், தேச விரோதிகளும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிப்பதோடு, நக்கல் நையாண்டியும் செய்து வருகின்றனர் என்று தேசப்பற்றாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it