உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. இச்சூழலில் அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சேவா இன்டர்நேஷனல் அமைப்பு பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டு விடக் கூடாது, உக்ரைன் – ரஷ்யா உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், இரு நாடுகளும் மிகவும் தீவிரமாக மோதிக் கொண்டு வருகின்றன. இதனால், உக்ரைனில் சிக்கியுள்ள தனது நாட்டு பிரஜைகளை மீட்க பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், இந்தியாவும் உக்ரைன் எல்லைகளான ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா மற்றும் ருமேனியாவுக்கு தப்பிவரும் இந்தியர்களை, விமானம் மூலம் மீட்டு டெல்லிக்கு கொண்டு வருகிறது.
தவிர, 4 மத்திய அமைச்சர்களை நேரடியாக களத்திற்கே அனுப்பி இருக்கிறார் பாரத பிரதமர் மோடி. இப்படி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசுக்கு வலுசேர்க்கும் விதமாக, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சேவா இன்டர்நேஷனல் அமைப்பும் களத்தில் குதித்திருக்கிறது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
ஒகி, கஜா, வர்தா, சுனாமி என பல இயற்கை சீற்றங்கள் மற்றும் கொரோனா பெரும் தொற்று மிகத் தீவிரமாக இந்தியாவில் பரவிய சமயத்திலும், மக்களோடு மக்களாக களத்தில் நின்றது ஆர்.எஸ்.எஸ். மற்றும் சேவா பாரதி அமைப்பு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், சேவா இன்டர்நேஷனல் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க பெரும் உதவி செய்து வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாது பிற நாட்டு பிரஜைகளையும் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றையும் வழங்கி வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.