அத்தியாவசிய ரேஷன் கிடைக்காமல் பாமர மக்கள் திண்டாட்டம் : நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின் ?

அத்தியாவசிய ரேஷன் கிடைக்காமல் பாமர மக்கள் திண்டாட்டம் : நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின் ?

Share it if you like it

தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நியாய விலைக்கடையில் விநியோகிக்கப்படும் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சம் பேர் என தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. சிறப்பு பொது வழங்கல் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ துவரம்பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வில் இருந்து தப்பிக்க ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைகிறது இந்த நியாய விலைக்கடைகள். ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை சரிவர வழங்கப்படவில்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் ஏழை மக்களை அலைக்கழிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நியாய விலைக்கடைகளில் மூன்றாவது மாதமாக தொடரும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு – ஏழை, எளிய மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் தட்டுப்பாட்டால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படாத நிலையில், நடப்பு மாதத்திலும் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது பொது விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது.

நியாய விலைக்கடைகளில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, வழக்கம் போல இம்முறையும் ஏதாவது காரணத்தைக் கூறி காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *