இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும், எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக கடும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை மத்திய அரசிற்கு தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைத்தளங்களின் மீது மத்திய அரசு தனது பார்வையை திருப்பியது. அதன் அடிப்படையில் புதிய சட்டங்களை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க மற்றும் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் குறை தீர்த்தல் அதிகாரியை உடனே நியமனம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகளை மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
மத்திய அரசின் புதிய விதிகளை பேஸ்புக், கூகுள், வாட்ஸ்-அப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் இன்று வரை ஏற்க மறுத்து வந்தது. குறிப்பாக கீழ்படிதல் மற்றும் குறை தீர்த்தல் அதிகாரியை நியமிக்காமல் டுவிட்டர் நிறுவனம் மெளனம் காத்து வந்தது.
புதிய விதிகளை ஏற்கும் படியும் இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு அண்மையில் இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஆனால், புதிய விதிகளை ஏற்காததால் இந்தியாவில் சட்ட ரீதியிலான பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் தற்பொழுது இழந்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களின் நிறுவனங்களுக்கு, 3 மாத கால அவகாசம் கொடுத்தோம். மற்ற நிறுவனங்கள் இந்தியாவின் புதிய விதிகளை ஏற்று கொண்ட பின்பு. டுவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை பின்பற்றவில்லை. இந்தியாவில் சமூகவலைதளங்களுக்கு கிடைக்கும் சட்டரீதியிலான பாதுகாப்பை இழக்க நேரிடும் அதுமட்டுமின்றி நாட்டின் தண்டனை சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களுக்கு டுவிட்டர் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் இறுதியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தொழில் நடத்தி கொண்டு இந்திய சட்டங்களுக்கு உட்பட மாட்டோம் என்று கூறும் டுவிட்டரை தடை செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.