வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதமேந்திய அமைப்பான யூஎன்எல்எப் உடன் அமைதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மத்திய, பாஜக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி வழிக்கு திரும்பி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சுமார் 60 ஆண்டுகளாக இவர்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-
ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது !
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) இன்று புதுதில்லியில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், வடகிழக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட மோடி அரசின் இடைவிடாத முயற்சிகள் நிறைவேறும் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்த்துள்ளது.
மணிப்பூரின் மிகப் பழமையான பள்ளத்தாக்கு அடிப்படையிலான ஆயுதக் குழுவான யூ.என்.எல்.எப். வன்முறையைக் கைவிட்டு பிரதான நீரோட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டுள்ளது. நான் அவர்களை ஜனநாயக செயல்முறைகளுக்கு வரவேற்கிறேன், அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையில் அவர்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :- வடகிழக்கு இந்திய மக்களின் வாழ்வில் அமைதி மற்றும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதில் இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்ட எங்கள் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பிரதமரின் தலைமையில் மத்திய அரசு எடுத்துள்ள பயனுள்ள நடவடிக்கைகளின் விளைவாக வடகிழக்கு மாநிலங்களில் மேம்பட்ட பாதுகாப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் 2014 உடன் ஒப்பிடும்போது 76% தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியின் போது வளர்ச்சி மற்றும் அமைதியை பெரிதும் இழந்த வடகிழக்கு பகுதி, பல சமாதான உடன்படிக்கைகளை அமல்படுத்தியதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியையும், பாதுகாப்பில் முன்னேற்றத்தையும் இன்று கண்டு வருகிறது. இதன் விளைவாக 2014 முதல் வடகிழக்கு பகுதியின் அமைதி மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பு ஆற்றுவதற்கு பல கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்துள்ளனர்.
மத்திய அரசுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட மணிப்பூரின் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்கிற ஆயுதக் குழு ( UNLF) தங்களது ஆயுதங்களை ஒப்படைத்த நிகழ்வானது, நமது மாண்புமிகு பிரதமர் மோடியின் விடாமுயற்சிக்கு சாட்சியாக நிற்கிறது. இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.