பார்லிமென்டில் பயன்படுத்தப்படும் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை. மாறாக நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பைத்தான் வெளியிட்டிருக்கிறோம். ஆகவே, தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசும்போது அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தும் வார்த்தைகள் லோக்சபா சபாநாயகராலும், ராஜ்யசபா தலைவராலும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவது மரபு. அவ்வாறு நீக்கப்பட்ட வார்த்தைகள் அவ்வப்போது புத்தகங்களாக வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்டு நீக்கப்பட்ட வார்த்தைகள் குறித்த புதிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்பது எதிர்வரும் 18-ம் தேதி கூடவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து அமலுக்கு வருகிறது. இதில், ஊழல், வெட்கக்கேடு, ஒட்டுகேட்பு, துரோகம், அராஜகவாதி, சகுனி, கொரோனா பரப்புபவர், சர்வாதிகாரம், சர்வாதிகாரி, நாடகம், கபட நாடகம், அழிவு சக்தி, காலிஸ்தானி, ரத்தக்களரி, குரூரம், இரட்டை வேடம், பயனற்றது, முதலைக் கண்ணீர், அவமானம், கோழை, கிரிமினல், கழுதை, கண்துடைப்பு, தவறாக வழிநடத்துதல், ரவுடித்தனம், போலித்தனம், பொய் உள்ளிட்ட ஏராளமான வார்த்தைகள் இடம் பிடித்திருக்கின்றன. மேற்கண்ட வார்த்தைகள் அவையில் பயன்படுத்தப்பட்டால், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதான் தற்போது சர்ச்சையாகி பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அதாவது, இது விமர்சனம் மற்றும் கடுமையாக தாக்கும் உண்மைகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கத்தை பாதுகாக்க போடப்பட்டுள்ள வாயடைப்பு உத்தரவு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருக்கின்றன. இதற்குத்தான் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை. நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பைத்தான் வெளியிட்டிருக்கிறோம். 1,100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எதிர்க்கட்சியினர் முழுவதுமாக படித்து விட்டனரா? அவ்வாறு படித்திருந்தால், தவறான கருத்தை பரப்ப மாட்டார்கள். இதேபோல 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010-ம் ஆண்டுகளிலும் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது நீக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும்கட்சியால் அவையில் பயன்படுத்தப்பட்டவை. ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டுமே பயன்படுத்தும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து நீக்குவது போல கூறுவது தவறு” என்று கூறியிருக்கிறார்.