நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த திருமலைபட்டி காமராஜர் காலணியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரு மகன்களையும் திருமலைப்பட்டியில் உள்ள சலூன் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார் இவர். சிட்டு என்கிற பெயரில் இயங்கி வரும் முத்துவின் சலூன் கடையில், மகன்களுக்கு முடித்திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டபோது, “தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உங்களுக்கு இங்கு முடித்திருத்தம் செய்ய முடியாது” என்று முடிதிருத்தம் செய்பவரிடம் இருந்து பதில் வந்துள்ளது.
முடித்திருத்தம் செய்யச்சொல்லி கேட்டுக்கொண்ட அருண்பாண்டியனிடம், “உங்களுக்கு இங்கு முடித்திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு இருக்கிறது. அதைமீறி நான் முடித்திருத்தம் செய்தால் இங்கு கடையை நடத்த முடியாது. இதனை 18 பட்டி மக்களும் உறுதி செய்துள்ளனர். இதுபற்றி யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். பஞ்சாயத்தில் பார்த்து க்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் கடையின் உரிமையாளர்.
தொடர்ந்து, “சாலையில் நடந்து செல்லும்போது ஒருவர் மயங்கி விழுந்தால், அந்த ஜாதிக்காரன்தான் தூக்க வேண்டும் என்று கூறினால், அவன் சேத்தே போய்விடுவானே” என்று அருண்பாண்டியன் எதிர்கேள்வி கேட்ட நிலையில், “ஊர் கட்டுப்பாடு, அதனை மீற முடியாது” என்று கூறியுள்ளார் சலூன் கடை உரிமையாளர். “இந்த காலத்திலுமா சாதியை பார்த்து முடித்திருத்தம் செய்வீர்கள், காசுக்குதானே கடை நடத்துகிறீர்கள்” என்று அருண்பாண்டியன் தரப்பு கேட்டாலும், அத்தனைக்கும் அசராமல் மறுப்பு தெரிவித்துள்ளார் சலூன் கடை உரிமையாளர்.
கல்வி தொடங்கி கம்ப்யூட்டர் டெக்னாலஜி எல்லாம் கைக்கு வந்துவிட்ட இந்த காலத்திலும், சாதியைக் காரணம் காட்டி தீண்டாமை கொடுமை அரங்கேறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சம்ப்வம் குறித்து புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதியிடம் கேட்போது, இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சலூன் கடை உரிமையாளர் முத்துவை போலீஸார் கைது செய்துள்ளனர்.