உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற யோகி அரசு கெடு விதித்துள்ளது.
மறைந்த பால் தாக்கரேவின் மருமகனும், அதிரடி அரசியலுக்கு சொந்தகாரருமாக இருப்பவர் ராஜ் தாக்கரே. இவர், நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், ராஜ் தாக்கரே பேசியதாவது; “மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகிறது? இதை தடுத்து நிறுத்தாவிட்டால், மசூதியின் வெளியே அதே அளவில் ஹனுமான் சாலிசா ஒலிக்கும்.
“நான் எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானவன் அல்ல, எனது சொந்த மதத்தில் பிரார்த்தனை செய்வதற்கு நான் பெருமைப்படுகிறேன். இஸ்லாமியர்களின் தொழுகைக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், மசூதியில் ஒலிபெருக்கிகளை அகற்றுவது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். நான் இப்போது எச்சரிக்கிறேன். ஒலிபெருக்கிகளை அகற்றவும் இல்லையேல் மசூதியின் முன் ஒலிபெருக்கி வைத்து ஹனுமான் சாலிசா ஒலிக்கப்படும் என அதிரடியாக தெரிவித்து இருந்தார்.
ராஜ் தாக்கரேவின் இந்த அதிரடியான கருத்து நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி இருந்தது. இதையடுத்து, இந்தியா முழுவதும் ஒலிபெருக்கிகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதற்கு, பல சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதரவினை வழங்கி இருந்தனர். இதையடுத்து, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு, ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில், ஒரு பகுதியாக 125 மசூதிகள், 83 கோவில்கள், 22 சர்ச்சுகள், 12 தொழிற்சாலைகள், 59 பார், பப், உணவகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஒலிபெருக்கிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை தனது மாநிலத்தில் விதித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பமான மதத்தைப் பின்பற்ற உரிமையும் சுதந்திரமும் இருந்தாலும், அவர்கள் விரும்பும் முறையில் வழிபடும்போது, மற்றவர்கள் தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதவிர, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல் படி ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள், மாநிலம் முழுவதும் இது நடைமுறைக்கு வரவேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, உ.பி காவல்துறையின் வழிகாட்டுதல் படி 11,000 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 35,000 ஒலிபெருக்கிகளின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கடந்த வாரம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.