உத்தரகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா காரணமாக உத்தரகண்ட்டில் உள்ள புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, சார்தாம் யாத்திரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்திருப்பதால், பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. எனினும், இப்பகுதிகளுக்குச் செல்லும் பாதை கரடு முரடானவை என்பதால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து 28 பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ் உத்தரகண்ட் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்திலிருந்து 28 பக்தர்கள் உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள யமுனோத்ரி தாமுக்கு சென்று கொண்டிருந்தனர். பக்தர்களைத் தவிர பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் இருந்தார்கள். நேற்று மாலை, டம்டாவிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புரோலா காவல் நிலையப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்து 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழுந்தது. தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஸ்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து 25 உடல்களை மீட்ட மாநில பேரிடர் மீட்புப் படையினர், காயமடைந்த 5 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில், “தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ள உள்ளூர் நிர்வாகம் சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்க முயற்சிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, டேராடூனில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். தகவலறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இச்சம்பவம் குறித்து தாமியிடம் பேசி நிலவரங்களை கேட்டறிந்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், “பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்த தகவல் வருத்தமளிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாநில பேரிடம் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறர்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “பன்னாவைச் சேர்ந்த யாத்ரீகர்கள் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. நானும் எனது குழுவும் உத்தரகண்ட் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில் குடும்பங்கள் தங்களைத் தனியாகக் கருதக் கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் அனைவரும் இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.