சுகாதார பாதுகாப்பு, ஊட்டச்சத்து, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற விஷயங்களில் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே முன்மாதிரியாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைத் தலைவர் பில் கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைத் தலைவர் பில் கேட்ஸ். இவரது மனைவி மெலிண்டா. இருவரும் 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பில் கேட்ஸ் உச்சத்தைத் தொட, மெலிண்டாவோ பில் கேட்ஸுடன் இணைந்து ‘பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை’ என்கிற பெயரில் ஒரு சமூக சேவை நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு சுமார் 4 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலவகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, 27 ஆண்டு திருமண வாழ்க்கையை பில்கேட்ஸும், மெலிண்டாவும் கடந்தாண்டு முறித்துக் கொண்டனர். எனினும், எவ்வித தொய்வும் இல்லாமல் அறக்கட்டளை சார்பில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். இந்த சூழலில், மேற்கண்ட பணிகளை பார்வையிடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு மெலிண்டா கேட்ஸ் நேற்று வருகை தந்தார். பின்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திப்பதற்காக, லக்னோவிலுள்ள அவரது அரசு இல்லத்திற்கு மெலிண்டா சென்றார். அங்கு அவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பிறகு, பரஸ்பரம் நல விசாரிப்புக்குப் பிறகு, இருவரும் மாநிலத்தில் நடந்து வரும் பணிகள் குறித்து விரிவாக விவாதித்தனர். அப்போது, அவரிடம் பணிகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் விவரித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெலிண்டா கேட்ஸ், “அடர்த்தியான மக்கள்தொகை மற்றும் பல்வேறு சமூக சவால்களுக்கு மத்தியிலும் உத்தரப் பிரதேச மாநில அரசு கொரோனாவை கையாண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விதத்தை உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். சுகாதார பாதுகாப்பு, ஊட்டச்சத்து, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற விஷயங்களில் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே முன்மாதிரியாக உத்தரப் பிரதேச மாநிலம் திகழ்கிறது” என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து, கொரோனா காலத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு அளித்த ஆதரவுக்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார்.