கலவரத்தில் ஈடுபடுபவர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள், புல்டோசர் மூலம் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து விட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவர்களின் வீடுகளை, புல்டோசர் கொண்டு இடிக்கும் கலாசாரத்தை, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இதனால், உ.பி.யில் மர்ம நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைந்தது. இத்திட்டம் நல்ல பலனளிக்கவே, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களிலும் வன்முறை, கலவரங்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகள், கடைகளை புல்டோசர் மூலம் இடிக்கும் கலாசாரம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதேபோல, டெல்லியில் நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலவரத்தில் ஈடுபட்ட, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளும் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.
இதையடுத்து, தங்களது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகளை மட்டுமே குறிவைத்து இடிப்பு நடவடிக்கைககள் எடுக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டின. மேலும், உத்தரப் பிரதேச மாநில அரசின் இந்த புல்டோசர் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை முதல்முறை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதற்கு மாநில அரசு சார்பில் முறையாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவற்கு தடை விதிக்க முடியாது. காரணம், அவ்வாறு செய்தால் மாநகராட்சி நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதாக அமைந்துவிடும்’ என்று கூறி தடை விதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டனர்.
ஆக, புல்டோசர் இடிப்பு தொடரும்!