கடந்த 2 மாதங்களாக 13 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்த மௌலவியை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் மசூரி கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒரு மதரஸா செயல்பட்டு வருகிறது. இந்த மதரஸா வளாகத்தில் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட மதராஸாவில் மௌலவியாக இருக்கும் முகமது ஷஹாதத் என்பவர்தான், இப்பள்ளியின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இப்பள்ளியில் 13 வயது சிறுமி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமியின் தம்பியும், தங்கையும் இதே பள்ளியில்தான் படித்து வருகின்றனர். இந்த சூழலில், தினமும் பள்ளி முடிந்ததும் அச்சிறுமியின் தம்பி, தங்கை உட்பட அனைத்து மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி விடும் மௌலவி ஷஹாதத், ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதாகக் கூறி அச்சிறுமியை மட்டும் இருக்க வைத்திருக்கிறார்.
பின்னர், தனது செல்போனில் இருக்கும் ஆபாச படங்களை அச்சிறுமியிடம் காட்டி, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால், உன்னையும், உன் தம்பி, தங்கைகளையும் கொலை செய்து கால்வாயில் வீசிவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனால், அச்சிறுமியும் பயந்துகொண்டு யாரிடமும் சொல்லவில்லை. கடந்த 2 மாதங்களாக மௌலவி இவ்வாறு செய்து வந்ததால், சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். எனவே, பள்ளிக்குச் செல்ல முடியாது என்று பெற்றோரிடமும் சொல்லி அடம் பிடித்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அப்பெண்ணின் பெற்றோர், என்ன ஏது என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான், பள்ளி நிர்வாகியான மௌலவி முகமது ஷஹாதத், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை அச்சிறுமி தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் மசூரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகியான மௌலவி முகமது ஷஹாதத் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த மௌலவி தனது வீட்டிலிருந்து தப்பிச் சென்று விட்டார். எனினும், போலீஸார் துரிதமாக செயல்பட்டு மௌலவி முகமது ஷஹாதத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அப்பள்ளியில் 6-ம் வகுப்புவரை மட்டுமே நடத்த அனுமதி பெற்றிருப்பதும், ஆனால், 8-ம் வகுப்புவரை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.