உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் ஹிந்துவாக மதம் மாறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சதாபாத் தாலுகாவைச் சேர்ந்தவர் அப்துல் ஜமீல். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர், தற்போது ஃபதேபூரின் தேவிகஞ்ச் மொஹல்லாவில் வசித்து வருகிறார். இவரது மனைவி அர்ஜுந்த் பானு. இத்தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் இன்ஜினீயர். 3-வது மகள் டாக்டர். மகன் முகமது ஷமீல் டெல்லியில் விமான பைலட் அதிகாரிக்கான படிப்பை படித்து வருகிறார். தற்போது 66 வயதாகும் அப்துல் ஜமீல்தான், இஸ்லாம் மதத்தில் இருந்து சனாதன தர்மத்தின்படி அனைத்து சடங்குகளுடன் வேத மந்திரங்களுக்கு மத்தியில் ஹிந்து மதத்தை தழுவி இருக்கிறார். மேலும், தனது பெயரை ஷ்ரவன் குமார் என்று மாற்றி இருக்கிறார்.
இதுகுறித்து அப்துல் ஜமீல் என்கிற ஷ்ரவன் குமார் கூறுகையில், “இஸ்லாம் மதத்தில் நிறைய பாகுபாடுகள் உள்ளன. உடன்பிறப்புகள் கூட, ஒருவருக்கொருவர் நம்பாத அளவுக்கு பேராசை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொத்துக்காக ஒருவரை ஒருவர் கொலைகூட செய்து விடுகிறார்கள். இந்த விஷயங்களுக்காக நான் வருத்தப்பட்டேன். எனவே, ஹிந்து மதத்திற்கு மாறுவது என முடிவு செய்தேன். நான் ராமரை வணங்குகிறேன். அவர்தான் என் தெய்வம். நான் ஹிந்துவாக மாறுவதற்கு எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. எனது முன்னோர்கள் சத்திரியர்கள். எனது கொள்ளுத் தாத்தாவின் பெயர் புட்டு சிங். 2 தலைமுறைகளுக்கு முன்பு எங்களது குடும்பம் ராஜபுத்திரர்களுடன் தொடர்புடையது.
நான் ஹிந்து மதத்திற்கு மாறப் போகிறேன் என்பதை அறிந்த எனது மைத்துனர் பாபர் என்கிற முஸ்டாக்கிம் என்னை வீட்டில் வைத்து பூட்டியதோடு, தாக்கவும் செய்தார். நான் என் தெய்வமான ராமரை நம்பினேன். நான் கடந்த 3 மாதங்களாக என் வீட்டில் பூஜை செய்து வருகிறேன். இப்போது நான் யாருக்கும் பயப்படவில்லை. யாராவது என்னை அச்சுறுத்த முயன்றால், காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்” என்று கூறியிருக்கிறார் மேலும், மாவட்ட நீதிபதியையும் சந்தித்து தனக்கு பாதுகாப்பு கேட்டிருக்கிறார் அப்துல் ஜமீல் என்கிற ஷ்ரவன் குமார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் உ.பி. மாநில ஷியா வஃக்பு வாரிய முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி, ஹிந்து மதத்துக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.