உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மோதலில் முக்கிய சதிகாரன் என்று குற்றம்சாட்டப்பட்ட ஜாவேத் முகமதுவின் 2 மாடி வீட்டை 3 புல்டோசர்கள் மூலம் 5 மணி நேரத்தில் இடித்து முடித்தனர்.
பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது இஸ்லாமிய மதப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு தகவல் பற்றி கூறினார். இதை சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் அடிக்கடி வெளியிட்டு, அச்சமுதாயத்தினரை தூண்டி விட்டதோடு, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு பதட்டத்தை ஏற்படுத்தினார்கள். இது உலகம் முழுக்க பரவிய நிலையில், இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, நுபுர் ஷர்மா மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அவர் மீது போலீஸில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒன்றுகூடி பேசி, கடந்த 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்து திரும்பியதும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். கல்வீசி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, பா.ஜ.க. அலுவலகத்துக்கும் தீவைத்து எரித்தனர். மேலும், பல்வேறு இடங்களிலும் சாலையில் டயர்களையும், அரசு, தனியார் வாகனங்கள், வணிக நிறுவனங்களை கொளுத்தியதோடு, போலீஸார் மீதும் கல்வீசி வெறியாட்டம் போட்டனர். இதில், ஏராளமான போலீஸாரும், பொதுமக்களும் காயமடைந்தனர். பின்னர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரித்த காவல்துறை, வன்முறையில் ஈடுபட்டவர்களின் அனைத்து சட்டவிரோத சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்தது. இதன் பிறகு, வன்முறையாளர்களை கைது செய்யும் படலத்தில் காவல்துறை இறங்கியது. அந்த வகையில், இதுவரை 356 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, வன்முறையாளர்களின் சட்ட விரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியது. இதன் முதல்கட்டமாக, பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் (பி.டி.ஏ.) இடிப்பு நோட்டீஸ் ஒட்டியது. குறிப்பாக, இந்த வன்முறைக்கு முக்கிய சதிகாரனான ஜாவேத் பம்ப் எனப்படும் முகமது ஜாவேத் வீட்டில் “சட்டவிரோதமாக கட்டப்பட்டது” என்று நோட்டீஸ் ஒட்டிப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 11 மணிக்கு வன்முறையாளர்களிடம் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இடிப்புக்கு முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், ஜாவேத்தின் குடும்பத்தினர் காலை 11 மணி வரை வீட்டை காலி செய்யவில்லை. எனவே, மதியம் 12:30 மணியளவில் வீட்டுக்கு முன்பாக ஒருபுல்டோசர் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, வீட்டின் காம்பவுண்டு சுவரை இடிக்க 2-வது புல்டோசர் கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு, 3-வதாக மேலும் ஒரு புல்டோசர் கொண்டுவரப்பட்டது. பின்னர், வீட்டுக்குள் இருந்த முகமதுவின் குடும்ப உறுப்பினர்களை போலீஸார் வெளியே அழைத்தனர். ஆனால், யாரும் வராததால் முதலில் காம்பவுண்ட் கேட்டை இடித்தனர். இதன் பிறகே முகமது குடும்பத்தினர் வெளியே வந்தனர்.
இதன் பின்னர், 5 மணி நேரம் கழித்து ஜாவேத் முகமதுவின் 2 மாடி வீடு முற்றிலும் இடிக்கப்பட்டது. ஜாவேத் முகமதுவின் வீடு இடிக்கப்படுவதற்கு முன்பு, போலீஸார் சோதனை நடத்தியதில், 2 சட்டவிரோத துப்பாக்கிகள், தோட்டாக்கள், பெரிய வீச்சரிவாள் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்ட காகிதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தவிர, ஜாவேத்தின் வீட்டில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் கொடியும் இருந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டதாகவும், ஜாவேத்துக்கும் அந்த அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, வீடுகளை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். ஆனால், இடிப்பதை நிறுத்த முடியாது என்று தெரிவித்துவிட்ட நீதிபதிகள், இடிக்கப்பட்டவை சட்ட விரோத கட்டடங்கள்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து, வழக்கை ஒத்தி வைத்து விட்டனர்.