மதம் மாறினால் ஹிந்து பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை அளிக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வலியுறுத்தி இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வருடாந்திர அகில இந்திய செயற்குழு கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 16-ம் தேதி தொடங்கி 19-ம் தேதிவரை நடந்தது. இக்கூட்டத்தில் மொத்தமுள்ள 45 பிராந்தியங்களைச் சேர்ந்த மாநிலத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் மாநில முழு நேர ஊழியர்கள், மாநில இணை முழு நேர ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே மற்றும் அகில இந்திய இணை பொதுச் செயலாளர்கள், தேசிய அளவிலான பிற நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே பேசுகையில், “கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வும், ஆலோசனையும் நடத்தப்பட்டது. மத மாற்றம் மற்றும் அண்டை நாடுகளான வங்கதேசம் உள்ளிட்டவற்றில் இருந்து ஊடுருவது போன்றவை, நம் நாட்டின் மத ரீதியிலான மக்கள் தொகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள மதமாற்ற தடைச் சட்டத்தை நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். மேலும், மதமாற்றம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதன் மூலம் மதம் மாறியவர்கள் பலரும் மீண்டும் ஹிந்து மதத்துக்கு திரும்பி வருகின்றனர். மதம் மாறுவோருக்கு பட்டியலினத்துக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கக் கூடாது” என்றார்.