உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவதூறாகப் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் எம்எல்.ஏ.வாக இருப்பவர் ஆசம் கான். இவர், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலயாம் சிங் யாதவ், மற்றும் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். அக்கட்சியின் அமைச்சரவையில் மிகவும் செல்வாக்காக இருந்தவர்.தற்போது 10-வது முறையாக 2022 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு நடந்த சமாஜ்வாதி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உ.பி. மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அவுஞ்சநேய குமார் சிங் ஆகியோருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை உமிழந்தார்.
இதையடுத்து, ஆசம் கான் மற்றும் 2 பேர் மீது ராம்பூரில் புகார் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழக்கப்பட்டது. அப்போது, ஆசம்கான் உள்ளிட்ட 3 பேரு குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், ஆசம்கான் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்வதாகக் கூறியதையடுத்து, 7 நாட்கள் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆசம்கான் மீது கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல், சிறு சிறு திருட்டுகள் என 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் சிறையில் இருந்த நிலையிலும், 2022-ம் ஆண்டு நடந்த உ.பி. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ராம்பூர் சதார் சட்டமன்றத் தொகுதியில் 10-வது முறையாக வெற்றி பெற்றார்.