உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிடச் சொல்வாரா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வராக 2-வது முறையாக வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறார் யோகி ஆதித்யநாத். அம்மாநிலத்தின் வரலாறை புரட்டிப் போட்டிருக்கும் யோகி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மாநிலத்தில் வன்முறையில் ஈடுபடுவர்கள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கும் புல்டோசர் கலாசாரத்தை நடைமுறைப்படுத்தி அதிரடி காட்டி இருக்கிறார். இதனால், மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடவே குணடர்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், தானும் கைசுத்தமானவர், தன்னைச் சுற்றிலும் இருப்பவர்களும் கைசுத்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் யோகி. இதற்காக, தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் மற்றும் தனது மாநிலத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி, “ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மையும், தூய்மையும் முக்கியம். ஆகவே, அனைத்து அமைச்சர்களும் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் தங்களது அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அதேபோல, அரசு ஊழியர்களும், பொதுமக்கள் அறியும் வகையில் சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும். மேலும், அரசுப் பணிகளில் அமைச்சர்களின் குடும்பங்கள் தலையிடாமல் இருக்க வேண்டும். தங்கள் செய்கைகளால் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் சரியான நேரத்தில் திறம்பட நிறைவேற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். யோகியின் இந்த அறிவிப்பு உ.பி. மாநில மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அதேசமயம், தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை எந்த அமைச்சர்களும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டதில்லை. அவ்வளவு ஏன், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் பலரும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள். அந்தவகையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் பலரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி இருப்பவர்கள்தான். ஆகவே, ஆட்சியிலே நேர்மை, தூய்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று பேசும் முதல்வர் ஸ்டாலின் தானும் தனது சொத்து விவரங்களை வெளியிட்டு, தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களையும் சொத்து விவரங்களை வெளியிடச் சொல்வாரா? என்று சாமானிய மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.