விவசாயிகளிடையே பிரபலமாகி வரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விவசாயிகள் விதைப்பண்ணை அமைக்கும் திட்டத்தில் இணைய ‘உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது. வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறித்து கொள்ளும் வகையில் உழவன் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அண்மைக் காலமாக இந்த செயலி மூலம் விவசாயிகள் பெரிய அளவில் லாபம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விதைப் பண்ணை அமைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத்திட்டத்தின் படி,ஒரு விவசாயக் குடும்பத்துக்கு அதிகபட்சமாக நெல்லுக்கு 5 ஏக்கரும், இதர பயிர் விதைகளில் 12.5 ஏக்கரும் விதைப் பண்ணையாக பதிவு செய்யலாம். விதை உற்பத்தி செய்து சுத்திகரிப்பு நிலை யத்தில் இருப்பு வைத்தவுடன் குறைந்தபட்ச ஆதார விலையில் 80 சதவீத தொகை, பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். சுத்திகரிப்புப் பணி முடிந்து ஆய்வு முடிவில் விதை தேர்ச்சி பெற்றவுடன், மீதமுள்ள தொகை கொள்முதல் விலையின்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களைத் தொடர்பு கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.